
ஜோதிடத்தின்படி செவ்வாய் பகவான் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் சஞ்சரிப்பார். அவர் ஆற்றல், தைரியம், உறுதி, துணிச்சல், செயல்பாடு ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். டிசம்பர் 7, 2025 அன்று அவர் தனது சொந்த ராசியான விருச்சிகத்தில் இருந்து குரு பகவானின் சொந்த ராசியான தனுசுக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 16, 2026 வரை தனுசு ராசியில் இருப்பார். செவ்வாய் பகவான் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாவது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரவுள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசிக்கு செவ்வாய் பகவான் ராசிநாதனாக விளங்குகிறார். அவர் மேஷ ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் அமர்கிறார். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் கைக்கு வந்து சேரும். ஆன்மீகப் பயணம் புனித தலங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். உயர் கல்விக்கான முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். ஒட்டுமொத்தமாக இந்த காலம் மிகவும் நல்லதாக இருக்கும்.
சிம்ம ராசிக்கு செவ்வாய் பகவான் ஐந்தாவது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக நிதி முதலீடுகளில் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களின் துணிச்சலான திட்டங்கள் வெற்றி பெறும். போட்டித் தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்ப உறவுகளில் நேர்மறை மாற்றங்கள் ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணியிடத்தில் தலைமைப் பண்புகள் வெளிப்படும். இதன் காரணமாக கூடுதல் பொறுப்புகள், சம்பள உயர்வுகள் கிடைக்கலாம்.
தனுசு ராசிக்கு செவ்வாய் பகவான் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக உங்கள் தைரியமும், ஆற்றலும் பன்மடங்கு அதிகரிக்கும். துணிச்சலாக செயல்பட்டு எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் முடித்து வெற்றியைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். புதிய வாகனம், புதிய வீடு, சொத்துக்கள் வாங்கும் யோகங்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் பதினோராவது வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது அனைத்து வகையிலும் லாபகரமாக அமையும். நீங்கள் ஏற்கனவே செய்த பழைய முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். நிதி நிலைமை பெரிய அளவில் உயரும். புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கலாம். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை, நற்பெயர் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் பொறுப்புகள் வந்து சேரும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.
மீன ராசிக்கு பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் சஞ்சரிக்கிறார். இது தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றத்தைத் தரும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் பணி மற்றும் அதிகார பலம் அதிகரிக்கும். பணி காரணமாக விரும்பிய இடமாற்றம் அல்லது வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கும். உங்களின் கடின உழைப்பால் அனைத்து வேலைகளிலும் வெற்றியைப் பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)