
வைர நகைகள் மிகவும் மதிப்பு மிக்கவை. வைரம் பதித்த நகைகளை அணிய பலரும் ஆசை கொண்டுள்ளனர். இருப்பினும் இந்த வைரங்கள் அனைவருக்கும் அதிர்ஷ்டத்தை தருவதில்லை. ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கற்களுக்கும் குறிப்பிட்ட கிரகங்களின் ஆட்சி உள்ளது. வைரம் என்பது சுக்கிரனுடன் தொடர்புடைய இரத்தினக் கல்லாகும்.
ஜோதிட ரீதியாக ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை மற்றும் அந்த ராசிக்கு சுக்கிரன் நட்பு கிரகமாக உள்ளதா இல்லையா என்பதை பொறுத்தே வைரம் அணிவது நன்மை பயக்குமா? அல்லது தீங்கு விளைவிக்குமா? என்று தீர்மானிக்கப்படுகிறது. இந்தப் பதிவில் எந்த ராசிக்காரர்கள் வைரம் அணியக்கூடாது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷ ராசியை செவ்வாய் பகவான் ஆட்சி செய்கிறார். செவ்வாயும், சுக்கிரனும் ஜோதிடத்தில் பகை கிரகங்களாக கருதப்படுகின்றன. எனவே மேஷ ராசிக்காரர்கள் வைரம் அணிவது வாழ்க்கையில் மோதல்களையும், மனக்கசப்புக்களையும், உறவுகளில் குழப்பத்தையும் ஏற்படுத்தலாம்.
மேலும் இவர்கள் வைரம் அணிவது என்பது கிரக மோதல்களை ஏற்படுத்தி நிதி சிக்கல்கள், கோபம், உடல்நலக் குறைபாடுகள், தேவையற்ற செலவுகளுக்கும் வழிவகுக்கும். தொழில் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும். மேஷ ராசிக்காரர்கள் பவளம் போன்ற செவ்வாய் கிரகத்திற்கு அனுகூலமான கற்களை அணிவது நன்மை தரும்.
சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான் சூரியனுக்கு சுக்கிரன் எதிரி கிரகமும் அல்ல, நட்பு கிரகமும் அல்ல, சூரியனும் சுக்கிரனும் சமமான கிரகங்கள். இருப்பினும் பெரும்பாலான ஜோதிட விதிகளின்படி சிம்ம ராசிக்காரர்கள் வைரம் அணிவது அசுப பலன்களை கொடுக்கும் அல்லது சாதகமாக இருக்காது என்று கூறப்படுகிறது.
இது ஆணவம், அகங்கார பிரச்சனைகள் அல்லது நேர்மறை ஆற்றல்களை சிதைப்பது உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும் நிதி இழப்புகள், குடும்ப உறவுகளில் பிரச்சனை, துரதிர்ஷ்டங்கள் ஆகியவை ஏற்படலாம். எனவே சிம்ம ராசிக்காரர்கள் வைரம் அணிவதை தவிர்க்க வேண்டும்.
விருச்சிக ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். மேஷ ராசிக்கு கூறப்பட்டதைப் போலவே செவ்வாய் மற்றும் சுக்கிரன் பகை காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் வைரம் அணிவதை தவிர்க்க வேண்டும். இது உணர்ச்சி ரீதியான கொந்தளிப்பு, தொழிலில் நஷ்டம், திருமண வாழ்வில் விரிசல் போன்ற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
மேலும் வாழ்வில் தடைகள், தொழிலில் பிரச்சனைகள், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள், எடுத்த காரியங்களை முடிக்க முடியாமல் போதல், தனிப்பட்ட உறவுகளில் பதற்றம் ஆகியவையும் ஏற்படக்கூடும்.
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். குருவும் சுக்கிரனும் ஜோதிடத்தில் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டுபவர்களாக கருதப்படுகிறார்கள். எனவே வைரம் அணிவது தனுசு ராசிக்காரர்களுக்கு நிதி இழப்புகள் அல்லது உணர்ச்சிப் பூர்வமான ஸ்திரத்தன்மையை உருவாக்கலாம்.
குரு பகவான் ஆன்மீகம், அறிவு, ஞானம், நீதியை குறிப்பவர். சுக்கிரன் இன்பம், பொன், பொருள், வசதிகள், ஆடம்பரத்தை குறிப்பவர். இந்த இரண்டு கிரகங்களும் ஒருவருக்கொருவர் பொருந்திப் போவதில்லை. எனவே இந்த ராசிக்காரர்கள் வைரம் அணிவது நிதி இழப்பு, எதிர்பாராத செலவுகள், வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
மீன ராசியின் அதிபதியும் குருபகவான் தான். தனுசு ராசிக்கு கூறப்பட்டது போலவே குரு மற்றும் சுக்கிரனுக்கு இடையே உள்ள பகை காரணமாக மீன ராசிக்காரர்களும் வைரம் அணிவதை தவிர்க்க வேண்டும். இது குழப்பம், தேவையில்லாத ஆசைகள் மற்றும் நிதி சார்ந்த பிரச்சனைகளை கொண்டு வரலாம்.
மேற்கூறப்பட்டுள்ள கருத்துகள் பொதுவான ஜோதிட விதிகள் மட்டுமே. வைரம் அணிவது உங்களுக்கு ஏற்றதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்கு உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தை அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது அவசியம்.
உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று அல்லது சுப ஸ்தானங்களில் அமைந்திருந்தால் மேற்கூறிய ராசிக்காரர்கள் கூட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வைரம் அணியலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)