
பொறுமை என்பது வெறும் காத்திருத்தல் மட்டுமல்ல. அது கடினமான சூழ்நிலையிலும் மனதை அமைதியாகவும் உறுதியாகவும் வைத்துக்கொண்டு சரியான நேரத்திற்காக காத்திருக்கும் ஒரு மகத்தான குணமாகும். ஒவ்வொரு மனிதனிடமும் இந்த குணம் வெவ்வேறு அளவுகளில் இருக்கும். ஜோதிட ரீதியாக பார்க்கும் பொழுது சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே பொறுமை என்னும் வரத்தை பெற்றிருக்கிறார்கள். இந்த கட்டுரையில் மிகவும் பொறுமையாக இருக்கும் ராசிகள் குறித்தும், அவர்களின் இந்த குணங்களுக்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகர ராசிக்காரர்கள் சனி பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் பொறுமை, நடைமுறை அறிவு மற்றும் கட்டுப்பாட்டுக்கு பெயர் பெற்றவர்கள். சனி பகவான் இவர்களுக்கு ஒழுக்கத்தையும், சுய கட்டுப்பாட்டையும் வழங்குகிறார். எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் இவர்கள் நிதானத்தை இழக்க மாட்டார்கள். உணர்ச்சி வசப்படுவதை விட ஒரு பிரச்சனைக்கு நடைமுறை தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவார்கள்.
இவர்களுக்கு விரைவான அல்லது திடீரென கோபம் வராது. தவறான விஷயங்களில் மட்டுமே இவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். கோபப்படுவதால் எந்த பயனும் இல்லை என்று இவர்கள் நம்புவதால் ஆக்கபூர்வமான விஷயங்களில் மட்டுமே கவனத்தை செலுத்துவார்கள். இவர்களை சீண்டுவது மிகவும் கடினம். ஆனால் ஒருமுறை எதிர்க்கத் தொடங்கி விட்டால் இவர்களின் எதிர்ப்பு மிகக் கடுமையானதாக இருக்கும்.
மீன ராசிக்காரர்கள் மிகவும் மென்மையானவர்கள். இரக்கம் மற்றும் உணர்வுபூர்வமானவர்கள். இவர்கள் தங்களின் சொந்த உலகத்தில் வாழ்வார்கள். மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்கள். இவர்களுக்கு கோபம் வந்தாலும் அது நீண்ட நேரம் நீடிக்காது. இவர்களின் இரக்க குணம் காரணமாக மற்றவர்களை எளிதில் மன்னித்து விடுவார்கள்.
மோதல்கள் மற்றும் கோபமான சூழ்நிலைகள் உருவாகும் பொழுது அங்கிருந்து விலகிச் செல்வார்கள். நேரடியாக பதிலடி கொடுக்காமல் அமைதியாக அங்கிருந்து நகர்ந்து விடுவார்கள். இவர்களை கோபப்படுத்தினாலும் உடனடியாக வெளிப்படுத்த மாட்டார்கள். தங்கள் உணர்வுகளையே உள் மனதிலேயே வைத்துக் கொள்வார்கள். இவர்களை கோபப்படுத்துவது என்பது மிகவும் கடினம்.
கும்ப ராசிக்காரர்கள் வித்தியாசமானவர்கள். பகுத்தறிவுடன் சிந்திப்பார்கள். சனி பகவானின் ஆதிக்கம் காரணமாக இவர்கள் உணர்வுகளை காட்டிலும் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் ஒரு சூழ்நிலையை உணர்ச்சி பூர்வமாக அணுகாமல் தர்க்கரீதியாக அணுகுவார்கள். கோபத்தை வெளிப்படுத்துவது ஒரு பயனற்ற செயல் என்று கருதுகிறார்கள்.
தனிப்பட்ட உணர்ச்சி மற்றும் மோதல்களில் இருந்து விலகி அறிவார்ந்த செயல்களில் ஈடுபடுவார்கள். ஒரு தனி நபரின் கோபம் இவர்களை பெரிய அளவில் பாதிக்காது. சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதை விட நேர்மறையான மாற்றங்களை கொண்டு வருவதில் தங்கள் நேரத்தை செலவிடுவார்கள். இவர்களை தனிப்பட்ட முறையில் கோபப்படுத்துவது மிகவும் கடினம்.
துலாம் ராசிக்காரர்கள் அமைதி, சமநிலை மற்றும் இணக்கத்தை விரும்புபவர்கள். சுக்கிரத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் இவர்கள் சண்டைகள், குழப்பங்கள் மற்றும் எதிர்மறையான சூழலில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறார்கள். இவர்கள் எப்போதும் சுமூகமான சூழலை உருவாக்க முயற்சிப்பார்கள். மற்றவர்களுடன் சண்டையிடுவது அல்லது கோபத்தை வெளிப்படுத்துவதை பலவீனமாக கருதுவார்கள்.
மோதல் ஏற்பட்டாலும் அதை அமைதியான வழியில் தீர்க்க முயற்சிப்பார்கள். கோபப்பட்டு கத்துவதை விட விவாதம் மூலம் பிரச்சனையை தீர்க்க விரும்புவார்கள். துலாம் ராசிக்காரர்கள் மிகவும் நியாயமானவர்கள். உங்கள் வாதத்தில் உண்மை இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். தேவையில்லாமல் கோபப்படுவதை இவர்கள் தவிர்க்கிறார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் புதன் பகவானின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள். இவர்கள் அதிகமாக யோசிப்பவர்கள், பகுப்பாய்வு செய்பவர்கள். எதையும் விமர்சன ரீதியாக அணுகுவார்கள். இவர்கள் அனைத்தையும் ஒழுங்கமைத்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புவார்கள். தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதும் அதனால் ஏற்படும் குழப்பமும் இவர்களுக்கு பிடிக்காது. கோபப்படுவதை விட தவறு செய்தவரை பகுப்பாய்வு செய்து அவர்களை திருத்துவதற்கு ஆலோசனை வழங்குவார்கள்.
உணர்ச்சிவசப்படுவதைக் காட்டிலும் வேலையை சரியாக செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு பொறுமை என்பது மிகவும் அதிகம். ஒரு சிறிய தவறுக்காக இவர்கள் கோபப்பட மாட்டார்கள். மீண்டும் மீண்டும் அதே தவறு நடந்தால் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)