
விருச்சிக ராசி நேயர்களே, 2026 ஆம் ஆண்டு எதையும் வெல்லக்கூடிய ஆண்டாக அமைய இருக்கிறது. ஆண்டின் முற்பகுதியில் சில சங்கடங்கள் தோன்றினாலும் ஆண்டின் பிற்பகுதி நல்ல வாய்ப்புகளையும், அதிர்ஷ்டத்தையும் வழங்குகிறது. இதுவரை உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் அனைத்தும் இந்த ஆண்டு விலக இருக்கிறது. அனைத்து தடைகளையும் தகர்க்கும் சக்தி உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்கும். புதிய மாற்றங்களை எதிர்நோக்கி செய்யும் பயணத்தில் வெற்றி கிட்டும்.
மே 2026 ஆம் ஆண்டு வரை குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணிக்க இருக்கிறார். ஜூன் 2, 2026 அவர் எட்டாம் வீட்டிலிருந்து ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த காலகட்டத்தில் விருச்சிக ராசியினர் விட்டதை பிடிக்கும் காலம் ஏற்படும். மனதில் ஒரு வித தெளிவும் அறிவாற்றலும் மேம்படும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.
அஷ்டம குரு கொடுத்த அசுப பலன்கள் அனைத்தும் மறையும். அஷ்டம குருவால் ஏற்பட்ட பாதிப்புகள் படிப்படியாக குறையும். பாக்கிய ஸ்தான குரு பகவான் நல்ல பலன்களை வழங்குவார். ஒருவரின் வருமானத்தில் தள்ளாடிக்கொண்டிருந்த குடும்பம் வருமானத்தில் உயர்ந்து நிற்கும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் எதிர்பாராத வரவும், முன்னேற்றமும் ஏற்பட்டு கடன்களை அடைப்பீர்கள்.
இதுவரை கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து வந்தவர்கள் புதிய வீடு, வாகனம் என்று வாழ்க்கை வளமானதாக மாறும். கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உதவி செய்து உங்களுக்கான புண்ணியத்தை அதிகரிப்பீர்கள். அரசு சார்ந்த துறைகள் மூலமாக ஆதாயங்கள் கிடைக்கலாம். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் காலம் நெருங்கி உள்ளது.
உங்கள் கடின உழைப்பினால் வெற்றியை தக்க வைப்பீர்கள். வருமான உயர்வால் வீட்டிலும் சமூகத்திலும் உங்கள் செல்வாக்கு உயரும். பெரியவர்கள் மற்றும் முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும்.
சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசியின் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டமானது உயர்வுகளை தரும் வருடமாக அமையும். புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனைகளும், அதை செயல்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களும் உருவாகும். செலவுகள் அதிகரித்தாலும் அதை சமாளிக்கக் கூடிய அளவிற்கு வருமானம் உயரும்.
மாணவர்கள் விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுத்து படிப்பீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். சொந்த வீடு, வாகனம், அழகு, ஆடம்பரப் பொருட்கள் என வாழ்க்கை இன்பமாக மாறும். வெளிநாட்டு குடியுரிமைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம்.
திருமணமான தம்பதிகள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக் கொடுத்துச் செல்வது வாழ்க்கையை இன்பமாக்கும். ஜாதக வலிமைக்கு ஏற்ப திருமணம் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்களுக்கு மறு விவாகம் நடக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு பணியில் இருந்து விலகும் சூழல் உண்டாகலாம்.
சொந்தங்களையும், உறவினர்களையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. திருமணம் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நல்லது. தடைபட்டு நின்ற சுப காரியங்கள் ஜூன் மாதத்திற்கு பிறகு மீண்டும் வேகம் எடுக்கும்.
டிசம்பர் 5, 2026 வரை ராகு பகவான் நான்காம் வீட்டிலும், கேது பகவான் பத்தாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். அதன் பிறகு ராகு மூன்றாம் வீட்டிற்கும், கேது ஒன்பதாம் வீட்டிற்கும் மாறுகின்றனர். ராகு மற்றும் கேதுவின் நிலையால் எந்த செயலையும் திட்டமிட்டு செய்வது நல்லது.
உபரியாக வரும் வருமானத்தை அரசு சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்வது அல்லது வீடு, வாகனம் போன்ற சுப விரயமாக மாற்றுவது நன்மை தரும். எந்த முயற்சியாக இருந்தாலும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்தல் கூடாது. ராகு கேது நிலையால் வீண் செலவுகள், மருத்துவச் செலவுகள் வரக்கூடும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். குழந்தைகளின் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
சனி, ராகு மற்றும் கேது பகவான் ஆகியோர் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடந்த சில மாதங்களாக படிப்பினைகளை கற்றுக் கொடுத்து வருகிறார்கள். இந்த சோதனைகளை அமைதியுடன் கடந்து வருபவர்கள் வெற்றிகளைப் பெறுவார்கள்.
இதுவரை ஏற்பட்டிருந்த பாதிப்புகள் இந்த வருடம் படிப்படியாக குறையும். வட்டிக்கு வட்டி கட்டி வந்த நிலையிலிருந்து மீண்டு வருவீர்கள். முன்னேற்றத்திற்கான பாதை தெளிவுபடும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சங்கடங்கள் நீங்கும்.
காஞ்சி காமாட்சியை வழிபடுவது நிலையான செல்வத்தை வழங்கும். பிரதோஷ காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவது நல்லது. திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபடுவது வாழ்க்கையில் நிலையான முன்னேற்றத்தை அளிக்கும். அஷ்டமி திதிகளில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்குவது சங்கடங்களை நீக்கும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது புண்ணியத்தை தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)