
தன்னம்பிக்கை நிறைந்த தனுசு ராசிக்காரர்களே, 2026 ஆம் ஆண்டு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும் ஆண்டாக அமையும். எந்த ஒரு சூழ்நிலையையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த கனவுகள், ஆசைகள் நிறைவேறும். உங்களுடைய எண்ணங்களும் நீண்ட கால லட்சியங்களும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். யோகங்களும் அதே சமயம் சவால்களும் கலந்த ஒரு சுவாரஸ்யமான ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமையப் போகிறது.
ஜூன் 2, 2026 ஆம் தேதி வரை குரு பகவான் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்திலும், பின்னர் அஷ்டம வீட்டிலும் சஞ்சரிக்க இருக்கிறார். எனவே இந்த வருடம் நீங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டிய வருடமாகும்.
அஷ்டம வீட்டில் இருக்கும் குருவின் தாக்கம் மற்றும் அர்த்தாஷ்டம சனி ஆகியவற்றின் காரணமாக தேவையற்ற மன உளைச்சல் மற்றும் அலைச்சல் ஏற்படலாம். சொத்துக்களை விற்றல் மற்றும் வாங்குதல் ஆகிய விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் அவசரம் காட்டுதல் கூடாது.
ஜூன் மாதத்திற்குப் பின்னர் வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வேலை மாற்றம், வீடு மாற்றம் ஆகியவற்றை ஏற்படலாம். பெண்களுக்கு தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தாய் மாமா அல்லது தாய் வழி தாத்தா மூலம் நிதி உதவிகள் அல்லது பூர்வீக சொத்துக்கள் கிடைக்கலாம்.
தொழில் செய்து வருபவர்களுக்கு சிறிய முயற்சியில் லாபம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உருவாகும். உயர்கல்வி முயற்சிக்கு சாதகமான சூழல் உருவாகும். பணிச்சுமை அதிகமாக இருந்த போதிலும் அதற்கு ஏற்ற பலன்களைப் பெறுவீர்கள்.
ஆண்டு முழுவதும் தனுசு ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்படும். பணம் கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்கள், முதலீடுகள், பங்குச்சந்தை போன்றவற்றின் மூலம் மறைமுக ஆதாயங்கள் கிடைக்கலாம்.
வைத்திய செலவு ,தேவையற்ற விரயங்கள், காரியத் தடைகள் முற்றிலும் விலகும். ஜூன் மாதத்தில் குருவின் பார்வை சனி பகவான் மீது விழுவதால் தேவையற்ற வழக்குகளில் இருந்து முழுமையாக விடுபடுவீர்கள். சொத்துக்களின் மதிப்பு உயரும். பல தலைமுறையாக விற்க முடியாமல் இருந்த குடும்ப சொத்துக்கள் விற்று லாபம் கிடைக்கும்.
சனி பகவானின் நிலை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த குடும்ப உறவுகள் மீண்டும் இணையும். கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்குகள் முற்றிலும் தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும். புதிய மனை, வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்வது அவசியம்.
நீண்ட கால நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் அல்லது உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். அர்த்தாஷ்டம சனி என்பதால் கால் வலி, மூட்டு வலி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். வாகனங்களை ஓட்டும்பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும்.
சனி பகவான் பார்வையால் மாணவர்களுக்கு ஆரம்பத்தில் கவனச்சிதறல் ஏற்படலாம். கவனத்துடன் படிப்பவர்கள் முழுமையான வெற்றியைப் பெறுவார்கள்.
வருடத்தின் துவக்கத்தில் ராகு மூன்றாம் வீட்டிலும், கேது ஒன்பதாம் வீட்டிலும் சஞ்சரிப்பார்கள். டிசம்பர் 5, 2026 ராகு பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திலும் கேது பகவான் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பார்கள். இதன் காரணமாக ஊர் மாற்றம், வேலை மாற்றம், வீடு மாற்றம் ஆகியவற்றை உண்டாகலாம். பண வரவு அதிகரிக்கும்.
தன ஸ்தனத்தில் கிரகங்கள் இருப்பதால் தனம், தான்யம், புகழ், செல்வாக்கு கிடைக்கும். அஷ்ட லட்சுமி கடாக்ஷம் கிடைக்கும். மனோ பலம், தேக பலம் ஆகியவை கிடைக்கக்கூடும். புதிய தொழிலில் எடுக்கும் முயற்சிகள் மாற்றத்தைத் தரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு.
அரசியலில் இருப்பவர்களுக்கு பெரிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பாக நல்ல தகவல்கள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளுடன் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்து இருந்த தாய் வழி உறவுகள் தேடி வரும்.
பிரதோஷ காலங்களில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது நன்மைகளைத் தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவது மன தைரியத்தை அளிக்கும். வியாழக்கிழமை மாலை வேளையில் லட்சுமி குபேரரை வழிபடுவது செல்வத்தைக் கூட்டும். முதியோர் இல்லங்கள் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு அல்லது ஆடைகளை தானமாக வழங்குவது புண்ணியத்தை தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)