உலகக்கோப்பை குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில், பிரேசில் அணி ஸ்காட்லாந்தை 3-0 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்தது. இந்த போட்டியில் பிரேசிலுக்காக வினிசியஸ் ஜூனியர் இரண்டு கோல்களும், மத்தியூஸ் குன்ஹா ஒரு கோலும் அடித்தனர். ஆட்டத்தின் தொடக்கத்தில் ஸ்காட்லாந்து பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால், அந்த நிலைமை நீடிக்கவில்லை. ஸ்காட்லாந்து வீரர்கள் தங்கள் பாக்ஸிற்குள் செய்த ஒரு பெரிய தவறால் பந்து வினிசியஸ் ஜூனியரிடம் சென்றது. கிடைத்த இந்த சூப்பர் வாய்ப்பை பயன்படுத்தி, வினிசியஸ் கோல் அடித்து பிரேசிலுக்கு முன்னிலை தந்தார். இது இந்த உலகக்கோப்பையில் அவர் அடிக்கும் மூன்றாவது கோல்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, இதேபோன்ற ஒரு தவற்றை ஸ்காட்லாந்து மீண்டும் செய்ய, வினிசியஸ் இரண்டாவது கோல் அடித்தார். ஆனால், VAR சோதனையில் அந்த கோல் ரத்து செய்யப்பட்டது. முதல் பாதி ஒரு கோலுடன் முடியும் என்று நினைத்தபோது, புருனோ குய்மரெஸ் கொடுத்த ஒரு அருமையான கிராஸில் தலையால் முட்டி வினிசியஸ் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.
இரண்டாம் பாதியில் ஸ்காட்லாந்து அணி ஆக்ரோஷமாக விளையாடியது. பிரேசில் கோல் போஸ்ட்டை நோக்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தினாலும், அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில், புருனோவின் மற்றொரு அட்டகாசமான அசிஸ்டில், மத்தியூஸ் குன்ஹா பிரேசிலின் மூன்றாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார். இறுதியாக, 75-வது நிமிடத்தில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தருணம் வந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நெய்மர் மஞ்சள் ஜெர்சியில் களமிறங்கினார். தனக்கு கிடைத்த கொஞ்ச நேரத்தில் ஒரு ஷாட் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
குரூப் 'சி'-யில் நடந்த மற்றொரு விறுவிறுப்பான ஆட்டத்தில், மொராக்கோ அணி ஹைட்டியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த போட்டியில், மொராக்கோவுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஹைட்டி அணிதான் முன்னிலை பெற்றது. கோல்கீப்பர் யாசின் போனோவின் கோல் மூலம் ஹைட்டி கணக்கைத் தொடங்கியது. ஆனால், அஷ்ரப் ஹக்கிமி மூலம் மொராக்கோ கோலை சமன் செய்தது. மீண்டும் வில்சன் இஸ் டோர் மூலம் ஹைட்டி முன்னிலை பெற்றது. முதல் பாதி முடிவதற்குள், இஸ்மாயில் சைபரி கோல் அடிக்க, ஆட்டம் 2-2 என சமநிலை ஆனது. இரண்டாம் பாதியில், சௌஃபியானி ரஹிமி மற்றும் ஜெஸ்ஸிமி யாசின் ஆகியோர் கோல் அடிக்க, மொராக்கோ 4-2 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது. குரூப் சுற்றுகள் முடிந்த நிலையில், பிரேசில் 7 புள்ளிகளுடன் முதலிடத்தையும், மொராக்கோ இரண்டாவது இடத்தையும் பிடித்து, அடுத்த 32 அணிகள் மோதும் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.