
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்ல குரூப் ஸ்டேஜ் ஆட்டங்கள் கடைசி கட்டத்துக்கு வந்திருக்கு. இதனால, நாக் அவுட் சுற்றுக்கு யார் போவாங்கன்னு ஒரே பரபரப்பா இருக்கு. சில டீம்ஸ் ஏற்கனவே ப்ரீ-குவார்ட்டர்ஸ் டிக்கெட்டை கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க. ஆனா, சில அணிகளுக்கு கடைசி மேட்ச் வாழ்வா சாவா போராட்டமா மாறியிருக்கு. இதுமட்டுமில்லாம, குரூப்ல மூணாவது இடம் பிடிக்குற சிறந்த நாலு டீமுக்கும் அடுத்த சுற்றுக்கு வாய்ப்பு இருக்கிறதால, கணக்குகள் ரொம்பவே சிக்கலாகியிருக்கு. இப்போ, குரூப் A, B-ல நாக் அவுட் வாய்ப்புகள் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.
குரூப் A-வைப் பொறுத்தவரை, மெக்சிகோ மட்டும்தான் இப்போதைக்கு நாக் அவுட் சுற்றை உறுதி செஞ்சிருக்கு. மீதமிருக்கிற ஒரே ஒரு இடத்துக்கு தென் கொரியா, செக் குடியரசு, தென்னாப்பிரிக்கான்னு மூணு டீம்ஸ் போட்டியில இருக்கு. இப்போதைக்கு தென் கொரியா தான் ரெண்டாவது இடத்துல இருக்கு. அவங்க அடுத்த மேட்ச்ல தென்னாப்பிரிக்கா கூட ஜெயிச்சாலோ அல்லது டிரா செஞ்சாலோ போதும், ரெண்டாவது இடம்பிடிச்சு நாக் அவுட் சுற்றுக்கு போயிடலாம். ஆனா, ஒருவேளை தென்னாப்பிரிக்கா கிட்ட தோத்து, இன்னொரு மேட்ச்ல செக் குடியரசு அணி மெக்சிகோவை ஜெயிச்சுட்டா, தென் கொரியா குரூப்ல நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, டூர்னமென்ட்டை விட்டே வெளியேறிடும்.
மூணாவது இடத்துல இருக்குற செக் குடியரசு, அடுத்த மேட்ச்ல வலுவான மெக்சிகோவை கண்டிப்பா ஜெயிக்கணும். அதோட, தென்னாப்பிரிக்கா-கொரியா மேட்ச்ல கொரியா தோற்கணும். அப்படி நடந்தா மட்டும்தான் அவங்களுக்கு நேரடியா நாக் அவுட் போக வாய்ப்பு கிடைக்கும். இல்லைன்னா, அவங்க வழி கிட்டத்தட்ட மூடிடும். தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்த மேட்ச்ல கொரியாவை ஜெயிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. அதே சமயம், செக் குடியரசு அவங்களோட கடைசி மேட்ச்ல ஜெயிக்காமலும் இருக்கணும். ஒருவேளை, தென்னாப்பிரிக்கா கொரியாவை ஜெயிச்சு, செக் குடியரசும் மெக்சிகோவை ஜெயிச்சுட்டா, ரெண்டு டீமுக்குமே 4 பாயிண்ட்ஸ் ஆகிடும். அப்போ, கோல் வித்தியாசத்தை வெச்சுதான் ரெண்டாவதா நாக் அவுட் போற டீம் எதுன்னு முடிவு செய்வாங்க.
அடுத்த சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?
குரூப் B நிலைமை ரொம்பவே குழப்பமா இருக்கு. ரெண்டு மேட்ச் முடிஞ்சும், இன்னும் ஒரு டீம் கூட நாக் அவுட் சுற்றை உறுதி செய்யல. இப்போதைக்கு கனடா, சுவிட்சர்லாந்து ரெண்டு டீமுக்கும் தலா 4 பாயிண்ட்ஸ் இருக்கு. கத்தார், போஸ்னியா அணிகளுக்கு தலா ஒரு பாயிண்ட் இருக்கு. குரூப்ல கடைசி மேட்ச்கள்தான் முடிவை தீர்மானிக்கும். கடைசி மேட்ச்ல கனடாவும் சுவிட்சர்லாந்தும் மோதுறாங்க. இந்த மேட்ச் டிரால முடிஞ்சா, ரெண்டு டீமுக்குமே 5 பாயிண்ட்ஸ் கிடைக்கும், ரெண்டு பேருமே ஒண்ணா நாக் அவுட் போயிடுவாங்க. ஒருவேளை கனடா தோற்றா கூட, அவங்களுக்கு இப்போ +6 கோல் வித்தியாசம் இருக்கு. அந்த பெரிய பலத்தால, ரெண்டாவது இடத்துல ப்ரீ-குவார்ட்டர்ஸுக்கு முன்னேற வாய்ப்பு அதிகம்.
சுவிட்சர்லாந்துக்கும் இதே கதைதான். ஜெயிச்சாலோ, டிரா செஞ்சாலோ நாக் அவுட் நிச்சயம். போஸ்னியா ரெண்டாவது இடம்பிடிச்சு உள்ள போறது கொஞ்சம் கஷ்டம். அவங்க கடைசி மேட்ச்ல கத்தாரை பெரிய கோல் வித்தியாசத்துல ஜெயிக்கணும். அதோட, கனடா-சுவிஸ் மேட்ச்ல தோற்கிற டீமை விட கோல் வித்தியாசம் அதிகமா இருக்கணும். கத்தாரோட நாக் அவுட் கனவு ரொம்பவே தூரத்துல இருக்கு. அவங்க போஸ்னியாவை பெரிய மார்ஜின்ல ஜெயிக்கணும். அதுமட்டுமில்லாம, கனடா-சுவிஸ் மேட்ச்ல தோற்கிற டீமை விட கோல் வித்தியாசம் நல்லா இருந்தா, ஏதாச்சும் அதிசயம் நடக்கலாம். இல்லைன்னா, ஊருக்குத் திரும்ப டிக்கெட் புக் பண்ண வேண்டியதுதான்.