
முன்னாள் அமைச்சரும், திமுக முக்கிய பிரமுகரான முல்லைவேந்தன் தனது ஆதரவாளர்களுடன் சென்று பழனியப்பனுக்கு ஆதரவு தெரிவித்ததால், தோல்வி பயத்தில் இருந்த அன்புமணி திமுக வேட்பாளரை மூன்றாவது இடத்திற்கு தள்ளிவிட்டு முதலிடத்தில் முந்திச் சென்றுள்ளார். முல்லை வேந்தனால் திமுகவின் மொத்த பிளானும் வீணாகிப்போயுள்ளது.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் திமுக சார்பாக செந்தில்குமாரும், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் தற்போதைய எம்.பி அன்புமணி ராமதாஸும், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் களமிறங்கியுள்ளனர். மீண்டும் எம்.பி.யாகிவிட வேண்டும் என்று தருமபுரி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் அன்புமணி ராமதாஸ், திமுக முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனை அவரது பண்ணை வீட்டில் நேற்று சந்தித்து பொன்னாடை அணிவித்து ஆதரவு கேட்டார்.
இதுதொடர்பாக பாமக செய்தித் தொடர்பாளர் க.பாலு தனது ட்விட்டர் பக்கத்தில், திமுகவின் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் அவர்கள் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஆதரவு. தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பாமக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என வாழ்த்து தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக மீது முல்லை வேந்தன் அதிருப்தியில் இருந்து வந்த நேரத்தில், பாமக வேட்பாளர் அன்புமணி அவரைச் சந்தித்து ஆதரவு கோரியது விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், முல்லைவேந்தன் தனது ஆதரவாளர்களுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் பழனியப்பன் அவர்களை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார்.
தர்மபுரியில் போட்டியிடும் அன்புமணி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர், அன்புமணியை தோற்கடிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்தால் அதே சமூகத்தைச் சேர்ந்த டாக்டர்.செந்திலை களமிறங்கினர். அமமுக சார்பில் போட்டியிடும் பழனியப்பன் வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
தர்மபுரியில் டாக்டர்.எஸ் செந்தில் குமார் குறிப்பிட்ட பிரிவு மக்களிடையே அதிக செல்வாக்கு கொண்டவர். வாக்குகளை அதிகம் பிரிப்பர். அன்புமணியைப் போல இவர் பெரிய பிரபலம் இல்லையென்றாலும், அந்த பகுதியில் அரசியல் தெரிந்தவர், டி.என்.வி குடும்பத்தின் வாரிசு, இவரது தாத்தா வடிவேல் கவுண்டர் பால் வியாபாரம், வட்டி வியாபாரம், பெரிய பெரிய பேக்டரி என அந்த சுத்துவட்டாரத்தில் நன்கு பிரபலமானவர். சொந்த ஊரில் பெரிய குடும்பத்தில் இருந்து வந்ததால் அந்த பகுதியில் செந்தில் மீது ரொம்பவே மதிப்பு வைத்துள்ளனர். அந்த சுற்று வட்டாரத்தில் பெரிய குடும்பத்து வாரிசு என்பதால் தர்மபுரியில் அன்புமணிக்கு எதிராக உள்ள தலித் மக்களின் வாக்குகளும் இவருக்கு மொத்தமாக விழும் என எதிர்பார்க்கப்பட்டது.
டாக்டர் செந்திலின் செல்வாக்கால், ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் இன்பசேகரனிடம் மோதி அன்புமணிக்கு பென்னாகரம் தொகுதியில் படுதோல்வி கிடைத்தது. இதனால் தோல்வி பயத்தில் இருந்த நிலையில் முல்லை வேந்தன் ஆதரவான வாக்குக்கள் அப்படியே கிடைக்கும் என சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது பழனியப்பனுக்கு ஆதரவு தெரிவித்ததால் முல்லைவேந்தனின் வெள்ளாள கவுண்டர் சமூகத்து வாக்குகள் அப்படியே பழனியப்பனுக்கு போகும், முல்லைவேந்தனின் ஆதரவான வாக்கு திமுகாவுக்குப் போகாமல் தடுக்கப்படுகிறது. இரண்டாவது இடத்தில் உள்ள அன்புமணி முதலிடத்திற்குப் போகிறார். மூன்றாவது இடத்திலுள்ள பழனியப்பன் இரண்டாம் இடத்திற்கு போகும்போது, திமுக மண்ணைக் கவ்வும் என்பது முல்லைவேந்தலால் நிரூபிக்கப்படுகிறது.
திமுகவில் மாவட்டப்பொறுப்பாளராகவும், அமைச்சராகவும் இருந்து கட்சியில் வேட்பாளரை உள்ளடி வேலை பார்த்து தோற்கடித்ததால், கட்சியிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு, அதன் பின் புதியதாக கட்சி தொடங்கப்பட்ட விஜயகாந்த் கட்சியில் சேர்ந்து அங்கும் போனியாகாமல், மீண்டும் தாய்க்கழகத்திற்க்கே திரும்பி வந்து ஒரு வருடம் கூட முழுசா ஆகாத நிலையில் இப்போது, அமமுக பழனியப்பனுக்கு ஆதரவளித்துள்ளார்.