
பள்ளி வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் மீது மரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, அதில் ஒருவர் தலையில் காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. சென்னை அண்ணாசாலையில் அரசினர் மதரஸா இ-ஆஸம் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி திறக்கப்படவில்லை. இந்நிலையில் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கான விளையாட்டு பயிற்சிகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று அடையாளம் தெரியாத இளைஞர்கள் சிலர் பள்ளி வளாகத்தில் கிரிக்கெட் விளையாடினர். அப்போது கிரிக்கெட் விளாயாடி கொண்டிருந்தவர்கள் மீது அங்கிருந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால் பரபரப்பானது. தகவல் அறிந்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மரம் விழுந்ததில் 4 பேருக்கு காயம் அடைந்தனர். அதில் 3 இளைஞர்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பது தெரிந்தது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் ஒருவர் தலையில் காயத்துடன் ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில் அவர் திருவல்லிக்கேணி அசுதீன் கான் தெருவைச் சேர்ந்த செய்யது ரியாஸ் (35) என்பது தெரிந்தது. இசைகருவிகள் விற்பனை செய்து வரும் இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போது தான் மரம் முறிந்து விழுந்தது.ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வளாகத்திற்குள் இவர்கள் அத்துமீறி நுழைந்தது எப்படி? விபத்து நிகழ்ந்தது எப்படி? என்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.