திருவாரூரில் படுகொலை செய்யப்பட்ட பூவனூர் ராஜ்குமாரின் உடலை வாங்க மறுத்து வளரும் தமிழகம் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகே உள்ள கமலாபுரம் என்கிற இடத்தில் காரில் வந்த வளரும் தமிழகம் கட்சி பிரமுகர் ராஜ்குமாரின் காரின் மீது எதிரில் வந்த ஸ்கார்பியோ மோதி விபத்தை உண்டாக்கிவிட்டு எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் பூவனூர் ராஜ்குமாரை வெட்டிப் படுகொலை செய்தனர். இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு 12 மணி நேரத்தில் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 2021ம் வருடம் நீடாமங்கலம் கடை வீதியில் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சிபிஐ ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் படுகொலைக்கு பழிவாங்கும் விதமாக இந்த படுகொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் வளரும் தமிழகம் கட்சியினர் ராஜ்குமாரின் உடலை வாங்க மறுத்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலின் போது ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாதுகாப்பு காரணம் கருதி நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.