
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த வைஷாலி நகரை சேர்ந்தவர் ராஜ்கமல்(28). இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வெள்ளவேடு பகுதியை சேர்ந்த வர்ஷினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அரிசி வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு ராஜ்கமல் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
காதல் திருமணம் செய்த இளைஞர் கொலை
அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ராஜ்கமல் மீது அடுத்தடுத்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். ராஜ்கமல் இரண்டு இடங்களில் தப்பித்து வேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். மர்ம நபர்கள் அவரை விடாமல் துரத்திச் சென்று 3-வது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் நிலை குலைந்து இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் அவர்களிடம் தப்பிக்க முயற்சித்த போது விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சுற்றி வளைத்தது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜ்கமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை
இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக கடம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜ்கமல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளுவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சாலை மறியல் போராட்டம்
இதனிடையே கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேரம்பாக்கம் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறையினர் உறுதி அளித்ததைதொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
வாகன சோதனை
இந்நிலையில் செவ்வாய்பேட்டை பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது காரில் வந்த 6 பேரை மடக்கி பிடித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் ராஜ்கமலை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்ற சீனிவாசன்(18), ஹரிபிரசாத்(18), கார்த்திக்(210, நெல்சன்(20) , யுவன்ராஜ் (18), நாதன்(19) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் ராஜ்கமல் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.