
கர்நாடகா மாநிலம் சுத்தகுண்டேபாளையா பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ஷில்பா (வயது 27). இருவரும் ஐடி துறையில் பணியாற்றி கைநிறைய சம்பளம் பெற்று வந்துள்ளனர். ஆனால் திருமணமான ஓராண்டு காலத்தில் பிரவீன் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு பானி பூரி வியாபாரத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் ஷில்பா மீண்டும் கர்பமாக இருந்துள்ளார்.
முன்னதாக திருமணத்தின் போது ஷில்பா குடும்பத்தினர் திருமணத்தின் போது பிரவீன் குடும்பத்தினருக்கு வரதட்சணையாக ரூ.50 லட்சம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் திருமணத்திற்கு பின்னர் ஐடி பணியை ராஜினாமா செய்த பிரவீன் பானி பூரி உணவகம் தொடங்க வேண்டும், புதிதாக தொழில் தொடங்க பணம் தேவைப்படுவதாகக் கூறி ஷில்பாவை தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் ஷில்பாவின் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளனர். அதன் பின்னரும் தீராத பிரவீனின் பணத்தேவையால் ஷில்பா நாளுக்கு நாள் துன்புறுத்தப்பட்டுள்ளார். இதனால் பிரவீனை மொத்தமாக வெறுத்த இளம் பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவரை சமாதானப்படுத்திய பிரவீனின் குடும்பத்தினர் மீண்டும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், கணவன், மனைவி இடையேயான பிரச்சினை மட்டும் தீர்ந்ததாக இல்லை.
இதனிடையே விரக்தியின் உச்சத்திற்கே சென்ற இளம் பெண் மனம் உடைந்து தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவுசெய்து தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பிரவீனின் வீட்டிற்பு வந்த காவல் துறையினர் ஷில்பாவின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் பிரவீன், அவரது தாயார், சகோதரி உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.