காபியில் தினமும் விஷம்: கணவரை கொலை செய்ய மனைவி முயற்சி - கையும் களவுமாக சிக்கியது எப்படி?

By Manikanda Prabu  |  First Published Aug 7, 2023, 1:12 PM IST

அமெரிக்காவில் காபியில் தினமும் விஷம் கலந்து தனது கணவரை கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்


அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் 34 வயது பெண் ஒருவர், பல மாதங்களாக தினமும் காபியில் ப்ளீச் எனப்படும் சலவை பவுடரை கலந்து கொடுத்து தனது கணவரை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அப்பெண் காபியில் ப்ளீச் கலக்கும் வீடியோவை எடுத்து அவரது கணவர் போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளார்.

அரிசோனா மாகாணம் டஸ்கான் பகுதியை சேர்ந்த மெலடி ஃபெலிகானோ ஜான்சன் என்பவர் மீது முதல் நிலை கொலை முயற்சி, மோசமான தாக்குதல் முயற்சி மற்றும் உணவு அல்லது பானத்தில் விஷம் சேர்த்தது ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்த தம்பதி கடந்த மார்ச் மாதம் ஜெர்மனியில் இருந்தபோது, காபியில் ஒரு மோசமான சுவையை அப்பெண்ணின் கணவர் ராபி ஜான்சன் உணரத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப்படையில் பணிபுரியும் ராபி ஜான்சன், குளோரின் சோதனை கருவிகளை பயன்படுத்தி தனது காபி பாத்திரத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக குளோரின் அளவு இருப்பதை கண்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையை வெளிக்கொணர முயற்சித்த ராபி ஜான்சன், தனது வீட்டில் ரகசிய கேமராவை பொருத்தி, தனது மனைவி மர்ம பொருள் ஒன்றை காபியில் கலப்பதை கண்டுபிடித்துள்ளார். இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், அமெரிக்காவில் உள்ள டேவிஸ் மாந்தன் விமானப்படைத் தளத்திற்குத் திரும்பியதும், காவல்துறையில் புகார் அளிக்கும் முன்பு வரை, ஆதாரங்களை சேகரிக்கும் பொருட்டு அவர் அந்த காபியை தொடர்ந்து குடித்து வந்துள்ளார்.

பங்குச்சந்தையில் எல்லாம் போச்சு! விரக்தியில் குடும்பத்தையே கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்!

அமெரிக்காவுக்குத் திரும்பியதும், பல ரகசிய கேமராக்களைப் பொருத்தி தனது மனைவியை பல நாட்கள் கண்காணித்து வந்துள்ளார். அதன் மூலம், அவரது மனைவி ப்ளீச்சை டப்பா ஒன்றில் கலந்து பின்னர் அதனை காபியில் கலக்கும் காட்சிகளை அவர் படம் பிடித்துள்ளார். விமானப் படையில் பணிபுரியும் அவரது உயிரிழப்புக்கு பின்னர் கிடைக்கும் பலன்களை பெறுவதற்காக அவரது மனைவி அவரை கொலை செய்ய முயற்சித்திருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடந்த வழக்கு விசாரணையின்போது, தான் குற்றமற்றவர் என மெலடி ஃபெலிகானோ ஜான்சன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவருக்கான வழக்கறிஞர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வழக்கறிஞர் இந்த வழக்கு தொடர்பாக இன்னும் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனிடையே, வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறும் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பிமா கவுண்டி சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

click me!