வழிப்பறி ஆசாமிகளிடம் இருந்து தப்பித்து ஓடிய பெண் காரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பவித்ரா (20). சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி துணிக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர், சென்னை மாதவரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்கள் இருவரும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல கடந்த 23ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோனேரிக்குப்பம் கூட்ரோட்டில் 24ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் வந்தபோது, அவர்களை பின் தொடர்ந்து பைக்கில் வந்த வழிப்பறி ஆசாமிகள் இருவர், அவர்களை வழிமறித்து ரமேஷ், பவித்ராவை மிரட்டி வழிப்பறி செய்துள்ளனர். மேலும், பவித்ராவிடம் அவர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க பவித்ரா ஓடியபோது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியதில் பவித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட இரண்டு பேரை தனிப் படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
முன்னதாக, சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் கார் விபத்து தொடர்பாக, சென்னை, முடிச்சூரைச் சேர்ந்த கார் ஒட்டுநர் பாஸ்கர் (45) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவ இடத்தில் காரை வேகமாக ஓட்டி வந்தபோது, திடீரென பவித்ரா குறுக்கே ஓடி வந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும், பயத்தில் காரை நிறுத்தாமல் சென்று விட்டதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.