கோவை மாவட்டம் விளாங்குறிச்சி அருகே கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகைக்காக பெண் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் விளாங்குறிச்சி சேரன் மாநகர் பகுதியை அடுத்த பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி(வயது 41). இவர்களது மகள் கார்த்திகா 12ம் வகுப்பு படித்து வருகிறார். சக்கரவர்த்தி பெயிண்டிங் ஒப்பந்ததாரராக தொழில் செய்து வருகிறார். மகள் கார்த்திகாவை பள்ளியில் இருந்து, ஜெகதீஸ்வரி தினமும் மாலை 4.30 மணியளவில் அழைத்துச்செல்வார்.
அதன்படி நேற்று மாலை 4.30 மணி ஆகியும் அவர் அழைத்துச் செல்ல வரவில்லை. கார்த்திகா 5.30 மணி வரை காத்திருந்தும் தனது அம்மா வராததால், வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். வீட்டின் படுக்கை அறையில் தனது தாயார் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
undefined
அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கழுத்து நெறிக்கப்பட்டு ஜெகதீஸ்வரி இறந்திருக்கலாம் எனவும், 4 சவரன் தங்க சங்கிலி மற்றும் ஒரு பவுன் நகை திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உதவி ஆணையர் பார்த்தீபன் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். நகைக்காக பெண் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குறித்து ஜெகதீஸ்வரியின் கணவர் சக்கரவர்த்தி கூறுகையில், தாம் வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதாகவும், தன்னுடைய மகள் மாலை 6.30 மணிக்கு போன் செய்து அம்மா இறந்து கிடப்பதாக தன்னிடம் தெரிவித்தார். மனைவி அணிந்திருந்த 5 பவுன் செயின் மற்றும் ஒரு பவுன் கம்மல் திருடுபோயுள்ளதாக தெரிவித்துள்ளார்.