விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைச்சிடுங்க... லண்டன் கோர்ட் தீர்ப்பு!

By sathish kFirst Published Dec 10, 2018, 9:55 PM IST
Highlights

லண்டனுக்கு தப்பித்து வந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடனாகப் பெற்றுவிட்டு, சில ஆண்டுகளாக பிரிட்டன் நாட்டில் வாழ்ந்து வருகிறார் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த, மத்திய அரசு தரப்பில் மும்முரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதனை முன்னிட்டு, நேற்றே சிபிஐ அதிகாரிகளும், மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகளும் லண்டன் சென்றுவிட்டனர். இந்த வழக்கில், விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்று லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவானது பிரிட்டன் வெளியுறவுத் துறைச் செயலரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். 

இந்த தீர்ப்பு குறித்து, 14 நாட்களுக்குள் விஜய் மல்லையா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அவர் மேல்முறையீடு செய்யாவிட்டால், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றதாகக் கருதப்பட்டு 28 நாட்களுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

எந்த நேரத்திலும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கடத்துவதற்கான தீர்ப்பு வெளியாகலாம் என்ற நிலையில், அவரை அடைப்பதற்காக மும்பை ஆர்தர் சாலையிலுள்ள சிறைச்சாலை தயார் செய்யப்பட்டது. தீர்ப்பு இப்படி விஜய் மல்லையாவிற்கு எதிராக வந்துள்ள நிலயில் இதற்கு முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, தீர்ப்பு இந்திய அரசுக்கு தரப்புக்குச் சாதகமாக வரும் என அறிந்த விஜய் மல்லையா தான் வாங்கிய கடன் தொகையின் அசல் முழுவதையும் செலுத்திவிடுவதாகவும், இந்திய அரசு அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார். 

ஏற்கனவே லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்குச் சிறை தயார் செய்யப்பட்டுள்ள தகவலையும், சிறையின் படங்களையும் சிபிஐ சமர்ப்பித்துவிட்டது. 

click me!