வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர்… மாவுக்கட்டு போட்டு அனுப்பிய போலீசார்..

By Raghupati RFirst Published Dec 11, 2021, 8:34 AM IST
Highlights

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை பிடித்து, மாவுக்கட்டு போட்டுள்ளனர் போலீசார்.a

வேலூர் மாநகரின் முக்கிய பகுதியான புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கோபிநாத். இவர் வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே ஆட்டோவுடன் நின்றுக்கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென ஆட்டோ ஓட்டுனர் கோபிநாத் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் அவரது பாக்கெட்டில் வைத்திருந்த 2500 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கோபிநாத் ‘திருடன், திருடன்’ என கூச்சலிட்டார். 

அதற்குள் மர்ம ஆசாமிகள் மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளனர். இது குறித்து, பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் கோபிநாத் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

இதில் கோபிநாத்திடம் பணம் பறித்த கும்பலை சேர்ந்தவர் வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில். காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவலர்கள் வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

காவல் துறையினர் வருவதை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த மர்ம ஆசாமி தண்டவாளத்தில் குதித்து தப்பியோட முயன்றுள்ளார். காவலர்கள் அவனை பின்தொடர்ந்து விரட்டிய போது, அவன் தண்டவாளத்தில் தவறி விழுந்து கை உடைந்தது. இதையடுத்து காவலர்கள் அந்த மர்ம ஆசாமியை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்துசென்றனர். பின்னர் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த நரேந்திரன் என்பது தெரியவந்தது. அவனிடம் இருந்து வீச்சு அரிவாள் உட்பட 6 கத்திகளை பறிமுதல் செய்தனர். 

மேலும் நரேந்திரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவனது கூட்டாளிகளான தோட்டப்பாளையத்தை சேர்ந்த ஆனந்தன், தியாகராஜன், எல்ஐசி காலனியைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தோட்டப்பாளையத்தை சேர்ந்த சசி என்ற சசிகுமார், சின்ன அப்பு என்ற சுகுமாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யபட்டவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.

 

click me!