தாயை சுட்டுக் கொன்று நாடகமாடிய மகன் அதிரடி கைது... உ.பி.யில் பரபரப்பு..!

By Kevin KaarkiFirst Published Jun 8, 2022, 9:55 AM IST
Highlights

வீட்டில் மின் பழுதை சரிபார்க்க வந்த மின் பொறியாளர் தான் தனது தாயை கொன்றதாக போலீசாரிடமும் மகன் கூறி இருக்கிறான்.

உத்திர பிரதேச மாநிலத்தின் லக்னோவில் மொபைல் கேம் விளையாடியதை கண்டித்த தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். பெற்ற மகனே தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சம்பவத்தன்று தாய் தனது மகன் தொடர்ச்சியாக மொபைல் கேம் விளையாடி வருவதை கண்டித்து இருக்கிறார். இதில் ஆத்திரம் அடைந்த மகன், தனது தந்தை உரிமம் பெற்று வீட்டில் வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து, தாயின் தலையில் குறி வைத்து சுட்டான். தலையில் சுடப்பட்டதை அடுத்து பலத்த காயம் அடைந்த தாய் அடுத்த சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார். 

ஏர் பிரெஷ்னர்:

இதை அடுத்து தாயின் சடலத்தை வீட்டில் இரண்டு நாட்களுக்கு வைத்து இருந்த மகன், சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க வீட்டில் இருந்த ஏர் பிரெஷ்னரை பயன்படுத்தி இருக்கிறான். மேலும் வீட்டில் இருந்த ஒன்பது வயது சகோதரியை கொலை பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டி இருக்கிறார். 

இத்துடன் தனது தந்தையிடம் தாயை வீட்டிற்கு வந்து இருந்த மின் பொறியாளர் சுட்டுக் கொன்று விட்டார் என சொல்லி இருக்கிறார். தாயை சுட்டுக் கொன்ற மகனின் தந்தை ராணுவ அதிகாரி ஆவார். இவர் மேற்கு வங்கத்தில் பணியாற்றி வந்துள்ளார். மின் பொறியாளர் தான் தனது தாயை கொன்றதாக போலீசாரிடமும் மகன் கூறி இருக்கிறான். எனினும், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மகனே, தாயை சுட்டுக் கொன்றதை அறிந்து கொண்டனர்.

விசாரணை:

“காவல் துறை அதிகாரிகளிடமும் அவன் அதே கதையை கூறி இருக்கிறான். ஆனால் நாங்கள் விசாரணை செய்ததில், அவன் கூறிய அனைத்தும் கற்பனை கதை என தெரியவந்தது. அதன் பின் மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்றோம். விசாரணையில் தாயை சுட்டுக் கொன்றதாக அவன் ஒப்புக் கொண்டான்,” என்று லக்னோ மூத்த காவல் துறை அதிகாரி எஸ்.எம். காசிம் அபிதி தெரிவித்து இருக்கிறார். இந்த வழக்குத் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

click me!