
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலை சுபம் திருமண மண்டபம் பின்புறம் செல்வி என்பவர் தனது வளர்ப்பு மகன் ஜான் (30) உடன் வசித்து வருகிறார். அவர் குடியிருக்கும் குடிசையில் ஏராளமான திருநங்கைகள் வருவது அங்கு தங்குவது வழக்கமாக உள்ளது. நேற்று இரவு செல்வியின் வளர்ப்பு மகன் ஜான் என்பவருக்கும் திருநங்கையான செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிழக்கு தெருவை சேர்ந்த வேல்முருகன் என்கின்ற கயல்விழியான திருநங்கைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் தகராறாக மாறியுள்ளது.
இருவருக்கும் தகராறு நடந்து வந்த நிலையில் கோவத்தின் உச்சிக்கே சென்ற ஜான் வீட்டில் வைத்திருந்த அரிவாளால் வேல்முருகன் என்கின்ற கயல்விழியின் தலை, கால், கை, முகம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். மேலும் ஜான் கயல்விழியின் உடலை அருகில் உள்ள சாக்கடை ஓடையில் வீசி சென்றுள்ளார்.
காலையில் கோபம் தணிந்த ஜான் இன்று காலை ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த திருநங்கையை மீட்டனர். பின்னர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .அதனைத் தொடர்ந்து சரணடைந்த லாரி டிரைவர் ஜான் இடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.