
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மொத்தம் 1,848 வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் அரசு அலுவலர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் காலையில் பணிக்கு சென்றால் மாலை அல்லது இரவு நேரங்களில் வருவது தான் வழக்கம். ஆகையால் பெரும்பாலும் வீடுகள் பூட்டியே இருக்கும். இந்நிலையில், ஏ பிளாக்கில் உள்ள 3 வீடுகள், சி3 பிளாக்கில் 10 வீடுகள் என மொத்தம் 13 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாநிலத்தை சேர்ந்த இர்பான், பர்மான் மற்றும் கல்லு ஆரிப் ஆகிய மூன்று பேரை சுட்டுப்பிடித்த நிலையில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இதுதொடர்பாக கோவை மாநகர் காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: கடந்த நவம்பர் 28ம் தேதியன்று உத்திரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இர்ஃபான், (48), த/பெ அன்வர், ஃபர்மான், (22), த/பெ. இலியாஸ் மற்றும் கல்லு ஆரிஃப், (60). த/பெ. இப்ராஹம் ஆகியோர் அவர்தம் கூட்டாளிகளுடன் சேர்ந்து C-5 கவுண்டம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் பட்டப்பகலில் குடியிருப்புகளில் உள்ள பூட்டை உடைத்து அங்குள்ள தங்க நகைகள், வெள்ளி நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார்கள்.
இது சம்பந்தமாக கோவை மாநகர், C-5 கவுண்டம்பாளையம் காவல் நிலைய குற்ற எண்.672/2025 ச/பி. 331(3), 305 மற்றும் 111(2)(b) பாரதிய நியாய சன்ஹிதா 2023 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு, செய்து மேற்படி மூன்று எதிரிகளான இர்ஃபான்,ஃபர்மான் மற்றும் கல்லு ஆரிஃப் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து, C-5 கவுண்டம்பாளையம் காவல் ஆய்வாளர் மற்றும் வடக்கு சரக காவல் துணை ஆணையாளர் அவர்களின் பரிந்துரையின் பேரில் கோவை மாநகரக் காவல் ஆணையர் சரவண சுந்தர் அவர்களின் உத்தரவின்படி மேற்படி எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில் உள்ள மேற்படி எதிரிகளுக்கு காவல் ஆணையரின் தடுப்பு காவல் ஆணை இர்ஃபான் (டி.பி.டி.ஏ எண் 686), ஃபர்மான் (டி.பி.டி.ஏ எண் 687) மற்றும் இ.கல்லு ஆரிஃப் (டி.பி.டி.ஏ எண் 685)) சார்பு செய்யப்பட்டுள்ளது.