
திருப்பூர் அரிசி கடை வீதியில் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. இதனால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலரை கத்தியால் தாக்க முயன்றுள்ளார். இதனை கண்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாக்குதலில் இருந்து தப்பிக்க கொஞ்சம் தூரம் ஓடிய காவலர் தனது இடுப்பில் இருந்த பெல்ட்டை கழற்றி அதன் மூலம் வாலிபர் கத்தியால் குத்தாமல் தற்காத்துக்கொண்டார்.
இதனையடுத்து அங்கிருந்த சக காவலர்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபர் யார்? எதற்காக தாக்க முற்பட்டார் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவலரை வாலிபர் கத்தியோடு துரத்திய வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு மட்டுமல்ல காவல்துறைக்கும் பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.