ஹெல்மெட் அணியாமல் சென்ற இளம்பெண்ணை துரத்திய போலீஸ் !! தவறி விழுந்ததால் லாரிக்கடியில் சிக்கி கால்களை இழந்த பரிதாபம் !!

By Selvanayagam PFirst Published Sep 21, 2019, 10:15 AM IST
Highlights

ஹெல்மெட் அணியாமல் சென்றதாக போலீசார் தடுத்த போது லாரி மோதி இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்த இளம்பெண்ணின் கால்கள் லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. இதையடுத்து போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் யுவனேஷ். இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா என்ற பிரியதர்சினி . இவர்களுக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது.

நேற்று இரவு 7.30 மணி அளவில் பிரியா, செங்குன்றம் அடுத்த கே.கே.நகர் அருகே உள்ள காவல் உதவி மையம் அருகில் உள்ள பேக்கரியில் தனது தாய் அம்முவின் பிறந்த நாளுக்காக கேக் வாங்கினார். பின்னர் இருசக்கர வாகனத்தில் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது காவல் உதவி மையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையிலான போலீசார், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரியாவின் இருசக்கர வாகனத்தை கம்பால் தடுக்க முயன்றார். இதனால் பிரியா, திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினார்.
அப்போது செங்குன்றத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த லாரி, அவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த பிரியா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவரது 2 கால்களும் நசுங்கியது. வலியால் அவர் அலறி துடித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், பிரியாவை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் பிரியா கீழே விழுந்ததற்கு போலீசாரே காரணம் என்று கூறி, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அதே இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நிறுத்தி இருந்த ஊர்க்காவல் படை வீரரின் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கியதுடன் பெட்ரோல் ஊற்றியும் எரித்தனர்.

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!