வாட்ஸ் ஆப் மூலம் 25 லட்சத்துக்கு புலிகுட்டி விற்பனை செய்ய முயன்ற நபரை வேலூர் மாவட்ட வனத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
புலிக்குட்டி வேண்டுமா..?
பொம்மேரியின் நாய் வேண்டுமா.? ஜெர்மன் ஷெப்பர்டு நாய் வேண்டுமா..? என ஸ்டேட்டஸ் வைத்து பார்த்து இருப்போம் ஆனால் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் புலிக்குட்டி விலைக்கு வேண்டுமா என வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த தகவல் வனத்துறைக்கு பரவிய நிலையில் வேலூர் வனத்துறையினர் வனவிலங்குகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலில் இருந்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் பார்திபன். திருப்பதியில் சட்டம் பயிலும் இவர் வேலூர் மாநகருக்குட்பட்ட சார்ப்பனாமேடு பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்திபன் தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டசில் புலிகுட்டி விற்பனை உள்ளது, விலை 25 லட்சம் என்றும். முற்றிலும் இது உண்மையான தகவல் என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
25 லட்சத்தில் புலிக்குட்டி
இந்த ஸ்டேட்டசில் இரண்டு புலிக்குட்டி இருப்பது போன்றும் அந்த புலிக்குட்டிக்கு மர்ம நபரின் கை உணவு அளிப்பது போலவும் புகைப்படம் உள்ளது. மேலும் தற்போது புக்கிங் மட்டும் செய்யப்படுவதாகவும், 10 நாட்களில் புலிக்குட்டி டெலிவரி செய்யப்படும் என கூறியுள்ளார். இதனை கண்காணித்த சென்னையை சேர்ந்த தலைமை வனத்துறையினர் இது குறித்து வேலூர் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேலூர் வன அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சார்பனமேடு பகுதியில் வசித்து வந்த பார்திபனை 1972 வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், சென்னை அம்பத்தூரை சேர்ந்த தமிழ் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சென்னை வனத்துறையினர் தமிழ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச அளவில் தொடர்பு
வேலூரில் கைதான பார்திபன் இதில் இடைதரகராக செயல்பட்டவர் என்றும் சென்னையை சேர்ந்த தமிழ் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவருக்கும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் புலிக்குட்டி வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்யப்படுகிறதா? அல்லது தமிழக வனப்பகுதியில் இருந்து கடத்தப்படுகிறதா? என சென்னை மற்றும் வேலூர் வனத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
திமிங்கல வாந்தியை கடத்திய 4 பேர் கைது… ரூ.10 கோடி மதிப்பிலான திமிங்கல வாந்தி பறிமுதல்!!