
பல்லாவரத்தில் அமைச்சரின் உறவினர் வீட்டில் 86 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை அனுபவித்து வந்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் அந்த நபரிடமிருந்து 86 சவரன் நகைகளையும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.
பல்லாவரம் அடுத்துள்ள பம்மல் சங்கர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவசண்முகம் இவர் பில்டர் ஆக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 16-3-2022 அன்று குடும்பத்துடன் சுற்றுலா சென்று விட்டு ஏழு நாட்கள் கழித்து வீடு திரும்பினார். அப்போது அவருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அப்போது அவர் பீரோவில் வைத்திருந்த 86 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. அதையடுத்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் சிவசண்முகம் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சங்கர்நகர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த கைரேகைகளை எடுக்கப்பட்டது, அதேபோல் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்து 10 நாட்களாகியும் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். பில்டர் சிவசண்முகம் அமைச்சரின் உறவினர் என்பதால் இந்த சம்பவம் தாம்பரம் கமிஷனர் ரவியின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து கமிஷனர் ரவி உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அப்பகுதி முழுவதும் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பல்லாவரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பம்மல் நாகல்கேணி ஈஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஞானமூர்த்தி (39) அதில் பதிவாகி இருப்பது தெரிந்தது
இதையடுத்து போலீஸார் அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் சவாரிக்கு திருவண்ணாமலை சென்று விட்டதாக ஞானமூர்த்தியின் உறவினர்கள் கூறினர். இந்நிலையில் போலீசார் அவருக்காக 3 நாட்கள் காத்திருந்தனர். பின்னர் மூர்த்தி வீட்டிற்கு வந்த நிலையில் போலீசார் மடக்கி பிடித்தனர். சங்கர் நகர் காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர்களது பாணியில் விசாரித்ததில் சிவசண்முகம் வீட்டில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார். ஆட்டோவை புதுப்பிப்பதற்காகவும், உல்லாச வாழ்க்கை வாழ ஆசை பட்டதாகவும், அதனால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணம் முழுவதையும் செலவழித்து விட்டதாகவும் கூறினார். நகைகள் எங்கே என போலீசார் கேட்டதற்கு நகையைப் பற்றி கவலைப்பட வேண்டாம் நகைகள் 86 சவரனும் பத்திரமாக ஆட்டோ இருக்கைக்கு அடியில் வைத்திருப்பதாக கூறினார்.
நிம்மதி பெருமூச்சு விட்ட போலீசார் ஆட்டோவில் இருந்த நகைகளை மீட்டனர். பின்னர் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். அவரை குறித்து விசாரித்ததில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு பல்லாவரம் பகுதியில் நகை கொள்ளை சம்பவம் அரங்கேற்றியதில் சிறைக்கு சென்று வந்தவர் என்பது தெரியவந்தது. உல்லாச வாழ்க்கை வாழ எளிதில் பணக்காரனாகிவிடவேண்டும் என்ற நப்பாசையில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாகவும் மூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.