
தெருவிற்கு தெரு ஏடிஎம்
உலகம் நவீனமாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் அதற்கு ஏற்றார் போல் மக்களும் மாறிக்கொண்டே வருகிறார்கள். வங்கியில் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்த காலம் மறைந்து தெருவிற்கு தெரு இருக்கும் ஏடிஎம் இயந்திரத்தில் மக்கள் பணத்தை எடுக்க தொடங்கியுள்ளனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் ஏடிஎம் உள்ள இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருடும் கும்பலை கேள்வி பட்டிருப்போம் ஆனால் தற்போது திரைப்படத்தில் வருவது போல் ஏடிஎம் மிஷினையே கொள்ளை கும்பல் ஒன்று அலேக்காக திருடி சென்றுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஏடிஎம் இயந்திரத்தை தூக்கி சென்ற மர்ம கும்பல்
பெங்களூர் புறநகரில் உள்ள சிக்ககொல்லஷெட்டி பகுதியில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் அறை உடைக்கப்பட்டு அங்கிருந்த இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஏடிஎம் இயந்திரத்தை திருடிய மர்ம கும்பல் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மயானத்தில் இயந்திரத்தை வீசி சென்றுள்ளனர். அந்த இயந்திரத்தை உடைத்த கும்பல் அதில் இருந்த 12 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு சென்றது தெரியவந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கொள்ளை கும்பல் சிசிடிவி கேமராவை சேதப்படுத்திவிட்டு காட்சிகள் பதிவாகியிருந்த டெக்கார்டரையும் திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இருந்த போது ஏடிஎம் இயந்திரம் அருகே உள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
ரூ.12 லட்சம் கொள்ளை
இந்த கொள்ளை சம்பவம் போன்று கடந்த மாதம் பெங்களூரு- மைசூர் சாலையில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம்மில் இருந்து கொள்ளை கும்பல் 20 லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளது. எனவே இரண்டு கொள்ளைகளிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொள்ளை சம்பவங்களில் கொள்ளை கும்பல் வாகனத்தை பயன்படுத்தி இயந்திரத்தை தூக்கி சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.