
கர்நாடக மாநிலத்தில் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் நடு இரவில் கடுமையாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முஸ்லீம் மக்களுக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக ஒரு நபருக்கு எதிராக கர்நாடக மாநிலத்தின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஹூப்ளி பழைய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சமூக வலைதள பதிவை போட்ட நபரை காவல் துறையினர் கைது செய்தனர். எனினும், காவல் துறை எடுத்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என கூறி புகார் அளித்தவர்கள் நேற்று இரவு காவல் நிலையத்திற்கு வந்தனர்.
தாக்குதல்:
இரவு நேரத்தில் பலர் ஒன்று சேர்ந்து கொண்டு காவல் நிலையத்தை சுற்றி வளைத்தனர். பின் வெளியில் நின்று கொண்டு, காவல் நிலையத்தின் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காவல் நிலையம் மட்டுமின்றி இன்ஸ்பெக்டர் உள்பட பல காவலர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. மேலும் போலீஸ் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.
தாக்குதலை தடுத்து நிறுத்தவும், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவும், போலீசார் லத்தி சார்ஜ், கண்ணீர் புகை குண்டு உள்ளிட்ட நடவடிக்கைகளை கையாண்டனர். இதை அடுத்து காவல் நிலையத்தில் நிலைமை கட்டுக்குள் வந்தது. பின் அந்த பகுதியில் தடை உத்தரவு போடப்பட்டது.
வழக்குப் பதிவு:
தாக்குதலில் காவல் துறைக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் இதர பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன. காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். "இவர்கள் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்தது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன," என்று ஹூப்ளி தார்வாட் பகுதிக்கான போலீஸ் கமிஷனர் லபு ராம் தெரிவித்தார்.
"மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் காவல் துறை அதிகாரி ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். தாக்குதலில் ஈடுப்பட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்," என அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.