தூத்துக்குடி மாவட்டத்தில் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழ் ஆசிரியரை காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கரிசல்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான இந்து நாடார் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 7-ம் மாணவியிடம், அதே பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வரும் மில்டன் ஞானசிங் என்பவர் சக மாணவர்கள் முன்னிலையில் தகாத முறையில் ஆபாசமாக பேசியது மட்டுமன்றி, பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமடைந்த 7-ம் வகுப்பு மாணவி இதுபற்றி வீட்டில் யாரிடமும் கூறாமல் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் வீட்டில் இருந்த எறும்பு பொடியை சாப்பிட முயன்றுள்ளார். அதனைக் கண்ட சிறுமியின் தாயார் சிறுமியை தடுத்து அச்சிறுமியிடம் கேட்டபோது பள்ளியில் நடந்தவற்றை தன் தாயிடம் மாணவி கூறியுள்ளார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர் மில்டன் ஞானசிங்-கை இடைநீக்கம் செய்கிறோம் என மழுப்பலாக கூறியுள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்த பெற்றோர் விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரனிடம், ஆசிரியர் மில்டன் ஞானசிங் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர்.
ஜெயிலர் படம், வெப் சீரிஸ் மாதிரி இதையும் கொஞ்சம் பாருங்க; மாணவர்களுக்கு கனிமொழி அட்வைஸ்
மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் மில்டன் ஞானசிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கைதாகியுள்ள தமிழ் ஆசிரியர் மில்டன் ஞானசிங் அடிக்கடி பள்ளியில் பயிலும் பல மாணவிகளிடம் இதுபோன்று தகாத முறையில் பேசி வந்ததாகவும், பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாகவும் கூறப்படுகிறது.