ஆன்லைனில் கடன் வாங்கிய இளைஞர்..வாட்சப்பில் உறவினர்களுக்கு நிர்வாண படங்களை அனுப்பிய கும்பல் -உயிரை பறித்த சோகம்

By Ajmal Khan  |  First Published Jul 26, 2023, 9:01 AM IST

ஆன்லைனில் கடன் வாங்கிய இளைஞரை மிரட்டிய மர்ம கும்பல், அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக வெளியிட்டதால் அதிர்ச்சி அடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆன்லைன் கடன் செயலி

தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு பக்கம் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், மற்ற பக்கம் மோசடி கும்பல் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி ஏமாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள ஏரி வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27) இவர்  கும்பகோணத்தில் உள்ள நுண்கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ராஜேஷ் மொபைல் போன் மூலம் ஆன்லைன் கடன் வழங்கும் செயலி மூலம் அடிக்கடி கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஆண்டு தனது மொபைல் போனுக்கு வந்த கடன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார். இந்த கடன் தொகையை ஒரு வருடத்திற்கு முன்பாகவே ராஜேஸ் செலுத்தியுள்ளார். 

Tap to resize

Latest Videos

இளைஞரின் மார்பிங் புகைப்படம்

இந்த நிலையில் ஆன்லைனில் கடன் வழங்கிய நிறுவனத்தினர் வாட்ஸ் அப் மூலம் ராஜேஷுக்கு தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இதற்கு ராஜேஸ் தான் ஏற்கனவே பணத்தை திரும்ப செலுத்திவிட்டதாக கூறியுள்ளார். இருந்த போதும் தொடர்ந்து மேலும் வாட்ஸ் அப் வீடியோ காலிலும் ராஜேஷிடம் அவர்கள் பேசி தொந்தரவு செய்துள்ளனர். இதன் அடுத்த கட்டமாக ராஜேஷின் புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக்கி அதனை ராஜேஷுக்கு அனுப்பி பணம் கட்டும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ், மிகுந்த மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று மயங்கி நிலையில் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு  சென்றுள்ளனர்.அப்போது ராஜேஷ் பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

விஷம் அருந்தி இளைஞர் தற்கொலை

இதனையடுத்து இது குறித்து வலங்கைமான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் ராஜேஷுக்கு வந்த வாட்ஸ் அப் கால் சவுத் ஆப்பிரிக்காவில் இருந்து வந்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படியுங்கள்

நெல்லையில் இளைஞர் ஆவணக் கொலையா? உண்மை நிலவரம் என்ன? காவல்துறை கொடுத்த விளக்கம்..!

click me!