காதல் ஜோடியை கிராம மக்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருப்பது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியைச் சேர்ந்த இசை ஆசிரியர் ஒருவர் தன்னைக் காதலிக்கும் மாணவியுடன் தனிமையில் இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த கிராம மக்கள் அவர்கள் இருவரையும் நிர்வாணமாக்கி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். ஊர்மக்கள் இருவரின் உடைகளையும் கிழித்து கொடூரமாக தாக்கிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட இசை ஆசிரியர் கிஷன் தேவ் சௌராசியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். தெக்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாக்தோல் கிராமத்தில் வசிக்கிறார். ஹார்மோனியம் ஆசிரியரான கிஷன் தேவ் பஜனையும் கீர்த்தனையும் செய்ய கற்பித்து வருகிறார்.
கிஷன் தேவ் அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். அந்தப் பெண் அவரிடம் ஹார்மோனியம் கற்றுக் கொள்வதாக கூறி கிஷன் தேவ் வீட்டிற்கு வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்தப் பெண் கடந்த ஜூலை 20ஆம் தேதி இரவு, ஹார்மோனியம் கற்க போவதாகக் கூறிவிட்டு, கிஷன் தேவ் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அவர்கள் இருவரும் கள்ள உறவில் இருப்பதாக கிராம மக்கள் சந்தேகப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த அன்று இரவு திடீரென கிராம மக்கள் கிஷன் தேவ் வீட்டிற்குள் புகுந்தனர். அப்போது, இருவரும் நெருக்கமாக இருப்பதைப் பார்த்துள்ளனர். உடனே ஆத்திரம் அடைந்த அவர்கள் சட்டத்தை கையில் எடுத்து, இருவரையும் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.
தாக்கியது மட்டுமின்றி அவர்களின் ஆடைகளையும் கிழித்துள்ளனர். அப்போது அங்கிருந்தவர்களில் ஒருவர் முழு நிகழ்வையும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிட்டார். இந்த வீடியோ அதிக அளவில் பரப்பப்பட்டு வைரலாகியுள்ளது. கிராம மக்கள் காட்டுமிராண்டித்தனமாக இருவரையும் தாக்கியிருப்பது அந்த வீடியோவில் அப்பட்டமாகத் தெரிகிறது.
இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து, போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர். "வைரலான வீடியோவில், மக்கள் அந்த ஜோடியை தவறாக நடந்துகொள்வதைக் காணலாம். நாங்கள் வீடியோவை விசாரித்து வருகிறோம்" என்று எஸ்பி யோகேந்திர குமார் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும், அதற்குப் பின் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் எஸ்பி யோகேந்திர குமார் தெரிவித்துள்ளார். காதல் ஜோடியைத் தாக்கிய நபர்களும் அடையாளம் காணப்பட்டு விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்.