கரூரில் விசாரணைக்கு ஆஜராக வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கூறி உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு - 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே கடந்த 2012ஆம் ஆண்டு தேவர் ஜெயந்தி முடித்துவிட்டு திரும்பி வரும் வழியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், தொடர்புடைய வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதற்கு ராமர் (எ) ராமகிருஷ்ணன் நேற்று கரூர் நீதிமன்றத்திற்கு கார்த்தி என்பவர் உடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அப்போது கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அரவக்குறிச்சி அருகே தேரப்பாடி பிரிவு சாலையில் மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்தனர். இந்த தாக்குதலில் கார்த்தி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராமர் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கொலை சம்பவத்தின் எதிரொலியாக அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் பரபரப்பாக காணப்படும் சூழ்நிலையில், மருத்துவக் கல்லூரி வளாகத்தை சுற்றி 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கரூர் மாநகர் முழுவதும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.