சேலத்தில் பணம் பறிப்பதற்காக பெற்ற மகளை இரையாக்கிய தாய் உள்பட 4 பேர் மீது வழக்கு

By Velmurugan s  |  First Published Mar 8, 2023, 12:35 PM IST

சேலத்தில் பணம் பறிக்கும் நோக்கில் மருத்துவ தம்பதியின் மகனுடன், கல்லூரி மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டல் விடுத்த மாணவியின் தாய் உள்பட 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


வாழப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ் (வயது 45). சேலம் அம்மாபாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி சங்ககிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறான். மேலும் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பிற்கும் சென்று வருகிறான்.

அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் அருகில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை வைத்து நடத்தி வருகிறார். உதயகுமாருக்கும், ரமேஷின் மகனுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். மாணவனின் பெற்றோர் இருவரும் மருத்துவர்கள், நல்ல வசதியான பின்புலத்தை கொண்டவன் என்பதை அறிந்துகொண்ட உதயகுமார் மாணவனை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்துள்ளார்.

Latest Videos

இதற்காக தனக்கு தெரிந்த பெண் ஒருவரின் மகளுடன் ரமேஷின் மகனுக்கு தொடர்பு இருப்பது போன்ற நாடகத்தை அவர் நடத்தியுள்ளர். இதற்கு அப்பெண்ணும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நாடகத்திற்காக அப்பெண் கல்லூரியில் படிக்கும் தனது மகளின் புகைப்படத்தையும், மருத்துவ தம்பதியின் மகனின் புகைப்படத்தையும் பொய்யாக சித்தரித்து ஒன்றாக இருப்பது போன்ற படத்தை உருவாக்கி உள்ளனர்.

பின்னர் அந்த படத்தை எடுத்துக் கொண்டு மாணவியின் தாயாரும், உதயகுமாரும் ரமேஷின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு ரமேஷிடம் அந்த புகைப்படத்தை காட்டி இது தொடர்பாக மாணவியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளார். அவர் புகார் அளிக்காமல் இருக்கவேண்டுமென்றால் எங்களுக்கு ரூ.10 லட்சம் பணம் தரவேண்டும் என்று பேரம் பேசியுள்ளனர். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ் இருவரையும் வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.

திருச்சியில் பயங்கரம்; மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து செவிலியர் தற்கொலை

பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் ரமேஷின் வீட்டிற்குச் சென்ற உதயகுமார் மாணவியின் தாயார் விஷம் குடித்துவிட்டார். நீங்கள் 10 லட்சம் பணம் தரவில்லை என்றால் நிச்சயம் இது பெரிய பிரச்சினையாகிவிடும் என்று மீண்டும் மிரட்டியுள்ளார். அந்த மிரட்டலை கேட்டு துளியும் அச்சப்படாத மருத்துவர் ரமேஷ் வீட்டின் வேறு அறைக்குச் சென்று காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தர்மபுரியில் மின்வேலியில் சிக்கி 3 காட்டு யானைகள் உயிரிழப்பு; 2 குட்டிகள் தவிப்பு

மருத்துவர் அளித்த தகவலின் பேரில் அவரது வீட்டிற்கு வந்த காவல் துறையினர் உடனடியாக உதயகுமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த புகைப்படம் பொய்யாக சித்தரிக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து உதயகுமார், மாணவியின் தாயார், புகைப்படத்தை பொய்யாக சித்தரித்து கொடுத்த இருவர் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

click me!