
ஆன்லைன் சூதாட்டத்தால் மீண்டும் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய இளைஞர்கள் பலர், ஆன்லைன் கேம்களை எந்நேரமும் விளையாடிவருகின்றனர். இதனால், அவர்களில் பலர் மனரீதியான பிரச்னைகளுக்கு ஆளாகிவருகின்றனர். ஆன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து நடுத்தெருவுக்கு குடும்பத்தை கொண்டு வரும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றதம் தடைவிதித்ததால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் கொடிகட்டி பறக்கிறது. .இந்த விளையாட்டில் ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் விளையாடி லட்சக்கணக்கான பணத்தை இழந்தது மட்டுமில்லாமல் உயிரையும் மாய்க்கும் நிகழ்வு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மணலியை சேர்ந்த பெயிண்டர் நடராஜ் என்பவர் ஆன் லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பணத்தை இழந்து கடனாளி ஆகியதால் மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
10 மாதங்களில் 24 தற்கொலைகள்
ஆன் லைன் சூதாட்டத்தால் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், வண்ணம் பூசும் தொழிலாளி ஆன்லைன் சூதாட்டத்தில் பெருமளவு பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நடராஜின் தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 10 மாதங்களில் நிகழ்ந்துள்ள 24-ஆவது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த இரு வாரங்களில் நிகழ்ந்த மூன்றாவது உயிரிழப்பு. ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது என்பதையே இது காட்டுகிறது ஆன்லைன் சூதாட்டங்கள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டியது எவ்வளவு அவசியம், இந்த விஷயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடும், கோரிக்கைகளும் எவ்வளவு நியாயமானவை என்பதற்கு இந்த நிகழ்வுகளை விட சரியான எடுத்துக்காட்டுகள் தேவையில்லை! ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிறப்பிப்பது குறித்து பரிந்துரைக்க வல்லுனர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அக்குழுவின் அறிக்கையை திட்டமிட்டபடி ஒரு வாரத்திற்குள் பெற்று உடனடியாக அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.