செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (32). ஜேசிபி இயந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவர் பாமகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார்.
மறைமலைநகர் அருகே பாமக நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (32). ஜேசிபி இயந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவர் பாமகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகிறார். இந்நிலையில், தனது நண்பரை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் மனோகரன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, கொண்டமங்களம் ஊராட்சி அலுவலகம் அருகே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர். உயிர் பயத்தில் அவர்களிடம் தப்பிக்க இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓடினார். ஆனால், அந்த கும்பல் விடாமல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மனோகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாமக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.