லிப்ட் கொடுத்து கொலை... பெண்ணின் தங்க செயினை விற்று பைக் வாங்கியவர் கைது...!

By Kevin KaarkiFirst Published May 17, 2022, 1:32 PM IST
Highlights

வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென வண்டியை நிறுத்திய ஹூசைன் கான், அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து ருபா பர்கர் தலையில் மிக கொடூரமாக தாக்கி இருக்கிறார்.

பெண் ஒருவரை கொலை செய்து, அவர் அணிந்து இருந்த  தங்க சங்கிலியை அடகு வைத்து புது பைக் வாங்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பைக் வாங்க பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

கோவா மாநிலத்தின் பனாஜி பகுதியை அடுத்த சன்வோர்டெம் கிராமத்தின் புதர் ஒன்றில் 54 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடலை கோவா போலீசார் மீட்டனர். அதன் பின் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ருபா பர்கர் என தெரியவந்தது. 

விசாரணை:

கர்நாடகாவை சேர்ந்த பெண் கோவா மாநிலத்தின் தெற்கு மாவட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் பல திடிக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன்படி பெண்ணை கொலை செய்தது 40 வயதான ஹூசைன் கான் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இவரை பிடிக்கும் முன் அதே பகுதியை சேர்ந்த சுமார் 50 பேரை போலீசார் விசாரித்தனர். 

கைது செய்யப்பட்ட  ஹூசைன் கான் அளித்த வாக்குமூலத்தின் படி, உயிரிழந்த பெண்மணி ருபா பர்கர் உயிரிழக்கும் முன் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டு நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற ஹூசைன் கான் பெண்ணிற்கு தனது பைக்கில் லிஃப்ட் கொடுப்பதாக கூறி அழைத்து சென்றார். வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென வண்டியை நிறுத்திய ஹூசைன் கான், அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து ருபா பர்கர் தலையில் மிக கொடூரமாக தாக்கி இருக்கிறார்.

கைது:

இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதும், அதே இடத்தில் சுருண்டு விழுந்த ருபா பர்கர் உயிரிழந்துள்ளார். ருபா பர்கர் சுய நினைவை இழந்து கீழே விழுந்ததும், அவர் அணிந்து இருந்த தங்க சங்கிலியை எடுத்துக் கொண்டு ஹூசைன் கான் அங்கிருந்து கிளம்பி சென்று இருக்கிறார். இதை அடுத்து தங்க சங்கிலியை அடகு வைத்து பைக் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். 

“மே 6 ஆம் தேதி ருபா பர்கர் என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணியாற்றி வந்த ஹூசைன் கான் என்ற நபரை கைது செய்து இருக்கிறோம்,” என தெற்கு கோவா பகுதிக்கான எஸ்.ஐ. அபிஷேக் தானியா தெரிவித்து இருக்கிறார்.

click me!