கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தனியாக கடைக்குச் சென்ற பெண்ணை கேலி செய்ததற்காக தட்டிக்கேட்ட கணவரை கஞ்சா போதையில் இருந்த சிறுவன் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணலூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். செங்கல் சூளை தொழிலாளியான இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 12 வயதில் ஆண் மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், சித்ரா நேற்று மாலை தெரு முனையில் உள்ள கடைக்கு வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கச் சென்றுள்ளார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கஞ்சா போதையில் சித்ராவிடம் தரக்குறைவாக பேசி கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. சிறுவன் கஞ்சா போதையில் இருப்பதை உணர்ந்த சித்ரா அவனிடம் இருந்து தப்பி வீட்டிற்கு வந்து தனது கணவனிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த விஜயகுமார் நேரடியாக சிறுவனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
ஆளுநரின் நடவடிக்கை தாமதமானது; இருந்தாலும் வரவேற்கிறோம் - அன்புமணி ட்வீட்
வீட்டில் இருந்த சிறுவனை வெளியில் அழைத்து சித்ராவிடம் கிண்டல் செய்தது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு சிறுவன் மிரட்டும் தொணியில் பதில் அளித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகளப்பாக மாறியது. ஆத்திரமடைந்த சிறுவன் கஞ்சா போதையில் தான் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து விஜயகுமாரின் கழுத்து பகுதியில் பலமாக தாக்கியுள்ளான்.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரம்; ஆர்.கே.சுரேஷ்க்கு வலை வீச்சு
இதில் படுகாயமடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா போதையில் சிறுவன் கொலை செய்யும் அளவிற்கு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.