கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எம்ஜிஆர் காய்கறி சந்தை கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை மீட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரின் மையப்பகுதியில் இராயக்கோட்டை சாலை அருகே எம்ஜிஆர் காய்கறி சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஏராளமான கடைகள் பாழடைந்துள்ளது. இந்த பாழடைந்த கட்டிடத்தின் மேல் பகுதி மொட்டை மாடியில் ஆண் ஒருவர் இரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியில் சென்றவர்கள் ஓசூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நகர காவல்துறையினர் மற்றும் காவல் துணைகண்காணிப்பாளர் பாபு பிரசாந்த் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவருக்கு சுமார் 30 வயது இருக்கும் என தெரிய வந்தது. மேலும் கொலை செய்யப்பட்டு இரண்டு மூன்று நாட்கள் ஆனதால் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது.
கிருஷ்ணகிரியில் கோர விபத்து; பேருந்து மீது மோதி 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி
இதன் பின்னர் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் யார்? அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து நகர காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.