பிளாக் ஆன இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்டுத் தருவதாக ரூ.90,000 அபேஸ் செய்த இளைஞர் கைது

By SG BalanFirst Published Apr 27, 2023, 8:43 PM IST
Highlights

பொய் புகார் மூலம் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கி, அதை மீட்டுத் தருவதற்காக ஆயிரக்கணக்கில் பணம் பறித்துவந்த 20 வயது இளைஞர் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

பிளாக் செய்த சமூக வலைத்தள கணக்கை மீட்டுத் தருவதாகக் கூறி பெண்ணிடம் இருந்து ரூ.90,000 பணம் பறித்ததாக 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஜாமியா நகரைச் சேர்ந்த ஜூனேட் பெக் என்று போலீசார் கண்டறிந்துள்ளனர். பெக் புகார் அளித்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் கணக்கு குறித்து பொய்யான புகார் கூறி இருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் பெண்ணின் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பெண்ணைத் தொடர்புகொண்டு தான் கேட்கும் பணத்தைக் கொடுத்தால் கணக்கை மீட்டுத் தருவதாக பேரம் பேசியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

Latest Videos

பாதிக்கப்பட்ட பெண் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் 8 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பின்தொடரப்படுகிறார். கடந்த மார்ச் 29 அன்று, தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என அந்தப் பெண் காவல்துறையில் புகார் அளித்தார். கணக்கு முடக்கப்பட்டதும் சாம் என்ற நபர் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டதாகப் புகாரில் கூறியுள்ளார்.

PAN Card: ஒருவர் எத்தனை பான் கார்டு வைத்துக்கொள்ளலாம்? மீறினால் என்ன தண்டனை?

குற்றம் சாட்டப்பட்டவர் இளைஞர் முதலில் பெண்ணிடம் ரூ.10,000 வசூலித்துள்ளார். பின்னர் மேலும் 80 ஆயிரம் ரூபாய் கேட்ட அவர், தொகையைக் கொடுக்கத் தவறினால் முடக்கப்பட்ட கணக்கை நிரந்தரமாக அழித்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால், அந்தப் பெண்ணும் ரூ.80 ஆயிரத்தை வழங்கி இருக்கிறார்.

அந்த இளைஞர் அனுப்பிய வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அந்தத் தொகையை அனுப்பி வைத்துள்ளார். விசாரணையின்போது, மோசடியில் ஈடுபட்ட இளைஞர் பெக்கின் மொபைல் எண்ணைக் கண்டுபிடித்தனர். அதன் மூலம் பாட்லா ஹவுஸுக்கு அருகிலுள்ள ஜாகீர் நகரில் இருந்து அவரைக் கைது செய்துள்ளதாக துவாரகா காவல்துறை துணை ஆணையர் எம். ஹர்ஷ வர்தன் தெரிவிக்கிறார்.

போலீசாரிடம் சிக்கியதும் அந்த இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் லட்சக்கணக்கான பயனர்களால் பின்தொடரப்படும் பிரபல நபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாகச் சொல்லி இருக்கிறார். அவர்களின் கணக்குகளில் ஏதேனும் ஒரு பதிவைக் கண்டுபிடித்து, இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு அதுகுறித்து பொய் புகார் அளிப்பதும், அதன் அடிப்படையில் கணக்கு முடக்கப்பட்டதும் அந்த இன்ஸ்டாகிராம் பிரபலத்தைத் தொடர்புகொண்டு பணம் கேட்பதாவும் கூறியுள்ளார். தொடர்ந்து இளைஞர் பெக்கிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் துணை ஆணையர் ஹர்ஷ வர்தன் தெரிவிக்கிறார்.

மோடி ஒரு விஷப் பாம்பு! சர்ச்சை பேச்சுக்கு புது விளக்கம் கொடுத்த காங்கிரஸ் தலைவர் கார்கே

click me!