
மேற்கொண்டு படிக்க ஆசைப்பட்ட காதல் மனைவியை கணவன் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 9 மாதங்களே ஆன நிலையில் இந்த கொடூரம் அரங்கேறியது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களை காதலிப்பது போல் ஏமாற்றி கற்பழித்து கைவிடுதல், காதலிக்க மறுக்கும் பெண்களை முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்துகொண்டு பிறகு வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது என எண்ணற்ற வன்கொடுமைகள் பெண்களுக்கு எதிராக அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில், மார்த்தாண்டத்தில் படிக்க ஆசைப்பட்ட காதல் மனைவியை காதல் கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் கொடூரம் அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஸ்டிகோ ரெயான், அதே பகுதியை சேர்ந்த ஜெப்ரினா என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஜெப்ரினா 8 ஆம் வகுப்பு படிக்கும்போதே இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். அப்போது ஜெப்ரினாவுக்கு திருமண வயது பூர்த்தி ஆகாததால் அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் இருவரையும் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகும் இருவரும் காதலை தொடர்ந்தனர். ஜெப்ரி நான் 12ஆம் வகுப்பு பயின்ற போது அந்தப் பெண்ணுக்கு 21 வயது நிறைவடைந்தது. இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் பதிவு திருமணம் செய்ய முயன்றனர். ஆனால் பல்வேறு காரணங்களால் பதிவுத்துறை அதை நிராகரித்தது. இருவரும் பதிவு திருமணம் செய்யாமலேயே சென்னையில் குடும்பம் நடத்தி வந்தனர்.
இருவருக்கும் வேலை இல்லாததால் கடுமையான வறுமைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் ஸ்டிகோ ரெயானின் தாய் திண்டுக்கல்லில் வசித்து வரும் நிலையில் இருவரும் அங்கு சென்றனர். ஹெலன் அங்கு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மூவரும் திண்டுக்கல்லில் வசித்து வந்தனர். இதற்கிடையில் ஜெப்ரினாவுக்கும் ஸ்டிகோ ரெயானுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவனை பிரிந்து கோவையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் வேலைக்கு சென்றுவிட்டார் ஜெப்ரினா, அங்கு பெண்கள் விடுதியில் தங்கி அவர் பணியாற்றி வந்தார். காதல் மனைவி சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து சென்றதால் சமூக வலைதளம் மூலம் அவரை கணவன் ஸ்டிகோ ரெயான் தேடினார். மனைவி கோவையில் இருப்பதை தெரிந்து கொண்ட ஸ்டிகோ ரெயான் கோவைக்கு சென்றார்.
அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் இருவரையும் சமாதானப்படுத்த திண்டுக்கல் வருமாறு அழைத்தார் தாய் ஹெலன், இந்நிலையில் இருவரும் திண்டுக்கல் சென்றனர் அங்கு ஹெலன் இருவரையும் சமாதானப்படுத்தி விட்டு வழக்கம்போல பள்ளிக்கு சென்றார். அப்போது ஸ்டிகோ ரெயான் காதல் மனைவி ஜெப்ரினிடம், இருவரும் முன்பு போல சென்னைக்கு சென்று விடுவோம் வா எனக் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த ஜெப்ரினா கோவையில் இருந்தபடியே வேலை செய்துகொண்டே படிக்கிறேன் என்றார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஸ்டிகோ ரெயான் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து காதல் மனைவியின் கழுத்தை கரகரவென அறுத்தார். காதல் மனைவி துடி துடித்து ரத்த வெள்ளத்தில் மயங்கினார். மனைவி உயிரிழந்ததை அடுத்து தானும் தற்கொலை செய்ய 3வது மாடியில் இருந்து ஸ்டிகோ ரெயான் குதிக்க முயன்றான்.
அப்போது தலை மற்றும் கை கால்களில் படு காயம் அடைந்த அவரை பொதுமக்கள் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் போலீசார் உயிரிழந்த ஜெப்ரினா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிக்க விரும்பிய காதல் மனைவியை காதல் கணவன் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.