
காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியின் தலையில் கல்லைப் போட்டுக் இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு நந்தினி, ரோஜா என்கிற 2 மகள்களும், விஜய் என்கிற ஒரு மகனும் உள்ளனர். முருகேசனின் 2வது மகள் ரோஜா ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இதனிடையே ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த நீலக்கிருஷ்ணன் மகன் சாமிதுரை கூடமலையில் உள்ள தனது பெரியப்பா வீட்டிற்கு சென்றபோது கல்லூரி மாணவி ரோஜாவை பார்த்துள்ளார். அவரை பார்த்ததுமே சாமிதுரை ஒரு தலை பட்சமாக காதலிக்க தொடங்கியுள்ளார். அடிக்கடி காதலிக்கும் படி ஓயாமல் டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால், பொறுமை இழந்த மாணவி இதுதொடர்பாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர், அந்த மாணவனை ஊர் தலைவர்கள் மற்றும் முக்கியமானவர்கள் எச்சரித்து அனுப்பினர்.
இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்றுள்ளார். அப்போது, தன்னை காதலித்து திருமணம் செய்து கொள் இல்லையென்றால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டுள்ளார். அப்படி இருந்த போதிலும் அவரது காதலை ஏற்கவில்லை. இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சாமிதுரை ரோஜாவை கீழே தள்ளி கல்லை தூக்கி தலையில் போட்டுள்ளார். அலறிய படி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது மகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். கொலை செய்து விட்டு தப்பியோடி சாமிதுரையை போலீசார் தேடி வருகின்றனர்.