முன்னாள் அமைச்சர் மகன் கைது.. கடத்தல் வழக்கில் சிக்கிய பின்னணி ..?

By Thanalakshmi VFirst Published Nov 27, 2021, 3:01 PM IST
Highlights

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தூத்துக்குடியில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள முந்திரி லாரி, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் அதிமுக முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் ஜெபசிங் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான முந்திரி ஆலை செயல்பட்டு  வருகிறது. அங்கு இருந்து ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்யவதற்காக  , 12 டன் எடை கொண்ட 1.10 கோடி ரூபாய் மதிப்பிலான முந்திரி லோடு ஏற்றிக்கொண்டு, தூத்துக்குடி துறைமுகத்தை நோக்கி வந்தது. மேலும் டிரைவர் ஹரி என்பவர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது முந்திரி ஏற்றி வந்த லாரி,  தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை வரும் போது,  அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று  கத்தியைக் காட்டி லாரியை மடக்கி, டிரைவரை தாக்கி விட்டு, கண்ணிமைக்கும் நொடியில் லாரியை கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் ஓட்டுநர் ஹரி தனது முந்திரி ஆலை மேலாளர் ஹரிகரனிடம் நள்ளிரவில் நடந்த சம்பவத்தையும் லாரி கடத்தப்பட்டுவிட்டதையும் தெரிவித்தாக சொல்லப்படுகிறது. அங்கு விரைந்து வந்த ஹரிகரன், டிரைவரை மீட்டு, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி ஏஎஸ்பி சந்தீஸ்குமார் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கடத்தப்பட்ட லாரியையும் , மர்ம கும்பலையும் தீவிரமாக தேடி வந்தனர். சுங்கச்சாவடிகளில் பதிவான காட்சிகளை வைத்து லாரியை போலீசார் தேடி வந்தனர். லாரி பின்னால் கார் ஒன்று தொடர்ந்து செல்வதை கண்டுபிடித்த போலீசார், லாரி, நாமக்கல் நோக்கி செல்வதை அறிந்து விரட்டி சென்றனர். மேலும் போலீசாரிடம் சிக்கிவிட கூடாது எனும் நோக்கில் அந்த மர்ம கும்பல், லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியை நீக்கிவிட்டு லாரியை ஓட்டிச் சென்றுள்ளது  என்பதும் விசாரணையில் தெரியவந்தது. கடத்தல் கும்பலோடு , சம்பவம் நடந்தன்று இருந்த லாரி டிரைவருக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா எனும் பல்வேறு கட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.

கடத்தல் வழக்கை விசாரித்து வந்த தனிப்படை போலீசார், கடத்தப்பட்ட லாரி தூத்துக்குடியில் இருந்து நாமக்கல் நோக்கிச் செல்வதை அறிந்து அங்கு விரைந்தனர். ஒரு கட்டத்தில் காவல் துறையினர் தங்களை நெருங்குவதை உணர்ந்த அந்த கும்பல், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேட்டுக்காடு என்ற பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர். லாரி மீட்ட தனிப்படை போலீசார் , கடத்தலில் ஈடுப்பட்ட மர்மகும்பலை தீவரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட எல்லையில்  திம்மநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக, கார் ஓன்று நின்றுக்கொண்டிருந்தது. அதை கவனித்த போலீசார், காரில் இருந்தவர்களிடம் விசாரித்தலில் , அந்த கும்பல் தான் முந்திரி லாரியை கடத்தி வந்த கொள்ளை கும்பல் என்பது தெரியவந்துள்ளது. லாரி கடத்தலில் ஈடுப்பட்ட கும்பலில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் ஜெபசங் என்பவரும் ஒருவர் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர் செல்லப் பாண்டியன் மகன் ஜெபசிங், விஷ்ணுகுமார், மனோகரன், மாரிமுத்து ராஜ்குமார், செந்தில்குமார் மற்றும் பாண்டி, உள்ளிட்ட 7 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட லாரியை புதுக்கோட்டை போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றனர். ஹரிகரன் புகார் அளித்து 12மணி நேரத்தில் கடத்தப்பட்ட  லாரியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது. 

click me!