லலிதா ஜுவல்லரி கொள்ளையன் மீண்டும் கைவரிசை.. ஜாமீனில் வெளிவந்து மீண்டும் திருட்டு..!

By Thanalakshmi VFirst Published Jan 28, 2022, 3:56 PM IST
Highlights

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி முருகனின் கூட்டாளியான கணேசன், ஜாமினில் வெளிவந்து மீண்டும் திருட்டில் ஈடுப்பட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் 55 வயதான கோபாலகிருஷ்ணன். இவரது வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி கொள்ளை நடைபெற்றது. வீட்டின் கதவை உடைத்து 47 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர் கொள்ளையடித்து சென்றார். இதுதொடர்பாக கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரில் வாடிப்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மறைந்த பிரபல கொள்ளையன் முருகனின் கூட்டாளியும் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவருமான கணேசன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஜாமீனில் வெளிவந்து சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறையில் வசித்துவந்த கணேசனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோபாலகிருஷ்ணன் வீட்டில் கைவரிசை காட்டியது கணேசன் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கணேசனை மீண்டும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 42 சவரன் தங்க நகைகளையும் மீட்டனர். பணம் மற்றும் மீதி நகைகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரி சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான 28 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பிரபல வங்கிக் கொள்ளையன் திருவாரூர் முருகன் லலிதா ஜுவல்லரியில் கைவரிசை காட்டியது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிய காவல்துறையினர் மணிகண்டன் என்பவரை அக்டோபர் 3ஆம் தேதி கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதனிடையே முருகன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த கணேசன் (35) என்பவரை தனிப் படை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவரது வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டி ருந்த 6.100 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. லலிதா ஜுவல்லரியில் கொள்ளையில் ஈடுபட்ட முருகனின் கூட்டாளிகளில் ஒருவரான கணேசன் மீண்டும் கைவரிசை காட்டி சிக்கியிருக்கிறார். ஜாமீனில் வெளிவந்து மதுரை அருகே பூட்டிய வீட்டில் 42 சவரன் நகையை திருடிய வழக்கில் செய்யப்பட்டுள்ளார். 

click me!