வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒருவர் தனது மனைவியை அடித்தே கொன்றுள்ள கொடூர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது
கேரள மாநிலம் திரிசூரில் உள்ள விய்யூரில் வசிப்பவர் உன்னிகிருஷ்ணன். இவருக்கு வயது 56. வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தான் கேரளா திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக கூறி, தனது 46 வயதான மனைவியை உன்னிக்கிருஷ்ணன் அடித்தே கொன்றுள்ளார். தொடர்ந்து இன்று அதிகாலை விய்யூர் காவல் நிலையத்துக்கு நேரடியாக வந்த அவர், போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், வெளிநாட்டில் இருந்த உன்னிகிருஷ்ணன் கடந்த 8ஆம் தேதிதான் கேரளா வந்துள்ளார். மனைவியை கொலை செய்து விட்டு, காவல்நிலையத்தில் சரணடைந்த அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
உன்னிகிருஷ்ணன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்ததாகவும், தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி அவரது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய மூன்றே நாளில் துரோகம் செய்து விட்டதாக கூறி, தனது மனைவியை கணவரே கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.