காண்டிராக்டர் தற்கொலை வழக்கு... அமைச்சர் மீது வழக்குப் பதிவு.. கர்நாடகாவில் பரபரப்பு..!

By Kevin KaarkiFirst Published Apr 13, 2022, 11:02 AM IST
Highlights

அமைச்சர் கே.எஸ்.ஈசுவரப்பா வளர்ச்சி பணிகள் செய்யும் விவகாரத்தில் 40 சதவீதம் வரை கமிஷன் வழங்க வலியுறுத்துகிறார் என்று பேட்டி அளித்தார்.

கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ். காண்டிராக்டரான இவர் சில மாதங்களுக்கு முன் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அமைச்சர் கே.எஸ்.ஈசுவரப்பா வளர்ச்சி பணிகள் செய்யும் விவகாரத்தில் 40 சதவீதம் வரை கமிஷன் வழங்க வலியுறுத்துகிறார் என்று பேட்டி அளித்தார். இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் காண்டிராக்டர் சந்தோஷ் வாட்ஸ்அப்பில் தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா கொடுக்கும் தொல்லைகளால், தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தவிப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். 

தற்கொலை:

இதை அடுத்து நேற்று காண்டிராக்டர் சந்தோஷ் உடுப்பியில் உள்ள தனியார் தங்கும் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் சந்தோஷ் தான் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். 

அதில் எனது சாவுக்கு அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தான் முழு காரணம் என எழுதப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது புகார் கூறிய காண்டிராக்டர் சந்தோஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் கர்நாடக மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

வழக்குப் பதிவு:

சந்தோஷிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், காண்டிராக்டர் சந்தோஷ் சகோதரர் பிரசாந்த் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா மற்றும் அவரின் உதவியாளர்கள் பசவராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோர் பெயர்களும் எப்.ஐ.ஆர்.-இல் சேர்க்கப்பட்டு இருக்கிறது. 

பரபரப்பு கடிதம்:

"ஆர்.டி.பி.ஆர். அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா தான் எனது சாவுக்கு  மிக முக்கிய காரணம். எனது லட்சியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த முடிவை நான் எடுத்து இருக்கிறேன். கைகளை கூப்பி எங்களின் பிரதமர், முதலமைச்சர், அன்புக்குரிய லிங்யாத் தலைவர் பி.எஸ்.வை மற்றும் அனைவரிடமும் எனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்," என தற்கொலை செய்து கொண்ட சந்தோஷ் தனது கடிதத்தில் எழுதி இருக்கிறார். 

விரைவான விசாரணை:

கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, காண்டிராக்டர் மறைவுக்கான காரணம் குறித்து விரைவாகவும், வெளிப்படையாகவும் விசாரணை செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். 

"ஈஸ்வரப்பா இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்து இருக்கிறார். அமைச்சர் சந்தோஷ் மீது அவதூறு வழக்கு பதிவு செய்து இருக்கிறார். மேலும் விசாரணையில் முழு உண்மை வெளியே வரும்." என முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். 

click me!