
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ராம்பக்த் கோபால் என அழைத்துக் கொள்ளும் இந்த நபர் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டார். பின் வீடியோவுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்ததோடு, இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதை அடுத்து தனது அக்கவுண்ட்டை பிரைவேட் ஆக மாற்றி விட்டார்.
கடந்த ஆண்டு தான், மகாபஞ்சாயத்து நிகழ்ச்சி ஒன்றில் முஸ்லீம் மதத்தினருக்கு எதிராக பேசிய குற்றத்தின் பேரில், கோபாலை காவல் துறையினர் கைது செய்தனர். பின் ஹரியானா நீதிமன்றம் கோபாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு இருந்தது. தற்போது கோபால் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், கார் ஜன்னலின் வெளியே துப்பாக்கி முனை தெரிகிறது. இத்துடன் கார் போகும் வழியில் நின்று கொண்டு இருந்த சிறுவர்களை மிரட்டும் வகையில் துப்பாக்கி காட்டப்படுகிறது.
துப்பாக்கியால் மிரட்டல்:
இதை அடுத்து சிறுவர்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள். இதே போன்று கார் போகும் வழியெங்கும் சிறுவர்கள் மற்றும் பெண்களை மிரட்டும் வகையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று வெளியான மற்றொரு வீடியோவில் சிலர் கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு, நபர் ஒருவரை தூக்கிக் கொண்டு காரின் பின்புற இருக்கைக்கு நடுவே உட்கார வைக்கின்றனர்.
தூக்கி செல்லப்படும் நபர், தன்னை விட்டுவிட அவர்களிடம் மன்றாடுகிறார். இந்த வீடியோ தலைப்பில் மாட்டை திருடியவனை தூக்கி செல்கிறோம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. வீடியோவின் பின்னணியில் இசை சேர்க்கப்பட்டு, நூற்றுக்கும் அதிகமானோர் ஆதரவு கோஷம் எழுப்பும் சத்தமும் கேட்கிறது. இன்ஸ்டாகிராம் வீடியோவுக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, இந்த நபர் டுவிட்டரில் எதிர்ப்பாளர்களுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
இவரின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை சுமார் 13 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். இவர் தன்னை கோட்சே 2.0 என அழைத்துக் கொள்கிறார். இவரின் பல்வேறு வீடியோக்களில் பாதுகாவலர்கள் மற்றும் ஆயுதங்கள் இடம்பெற்று உள்ளன.