கோவை பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட விபத்தில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கார் விபத்து
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று அதிகாலை மாருதி காரில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கார் இரண்டாக உடைந்தது. அப்போது காரனது தீயில் எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்த கடைகளுக்கும் தீ பரவியது. இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
உடல் கருகி ஒருவர் பலி
இதனையடுத்து காரில் சோதனை மேற்கொண்ட போது ஒருவர் உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. கார் வெடித்தது தொடர்பாக கோவை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரியில் இருப்பதால் இறந்த நபர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவையில் வெடித்து சிதறிய கார் குறித்து பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சதி செயலாக இருக்குமா..?
காரில் சிலிண்டர் வெடித்தது விபத்தா அல்லது அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நிகழ்த்தும் நடவடிக்கையா? என்ற கோணத்தில் தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது . இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் இந்த பகுதிக்கு குவிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 200 மீட்டருக்கு மேலே இந்த சாலையில் யாரும் உள்ளே அனுமதிக்கபடவில்லை. சதி செயலாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதால் கோவைக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் ஆகியோர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.