தொடரும் போலீஸ் அராஜகம்.. டிஎஸ்பி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.!ஜமுனாவுக்கு நீதி கிடைக்குமா.?!

By T BalamurukanFirst Published Jun 26, 2020, 10:30 PM IST
Highlights

சமீப காலமாக காவல்துறையில் சில போலீஸ் அதிகாரிகளின் அராஜகம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.இதன் தொடர்ச்சியாக சாத்தான்குளத்தில் தந்தை மகனை அடித்தே கொன்ற போலீஸ் அதிகாரிகள் அராஜகம் தமிழகத்தை மட்டுமல்லாது உலகத்தையே உலுக்கி எடுத்திருக்கிறது.

சமீப காலமாக காவல்துறையில் சில போலீஸ் அதிகாரிகளின் அராஜகம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.இதன் தொடர்ச்சியாக சாத்தான்குளத்தில் தந்தை மகனை அடித்தே கொன்ற போலீஸ் அதிகாரிகள் அராஜகம் தமிழகத்தை மட்டுமல்லாது உலகத்தையே உலுக்கி எடுத்திருக்கிறது. சென்னை போலீசார் பாத்ரூம் டெக்னிக் பயன்படுத்துவதும், தென்மாவட்ட போலீசார் கொலைவெறி தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாகவே இருக்கிறது.இந்த நிலையில் தென்காசியை சேர்ந்த பெண் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் என் கணவரின் இறப்புக்கு போலீஸ் அதிகாரிகள் தான் காரணம் என்று கண்ணகி போல் நீதி கேட்டு  வழக்கு தொடர்ந்திருக்கிறார். 

இதுகுறித்து கணவனை பறிகொடுத்த மனைவி ஜமுனாபாய் பேசும் போது.. "எங்களுக்கு திருமணம் ஆகி 13 வருசம் ஆச்சு.இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். என் கணவர் அருணாசலம் மீன் வியாபாரம் செய்து எங்களை காப்பாற்றி வந்தார்.எங்கள் வாழ்க்கை சந்தோசமாக போய் கொண்டிருந்த நேரத்தில் கடந்த மே மாதம் 21ம் தேதி எங்கள் வாழ்க்கையில் காக்கி சட்டைவடிவில் எமனாக சப்இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், பலவேசம் ஆகியோர் வந்திறங்கினார்கள். நீண்ட நேரமாகியும் அன்றைய தினம் என் கணவர் வீடு திரும்ப வில்லை. நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று பின்னர்  திரும்ப வெளியில் அனுப்பிவிட்டனர். ஆனால் என் கணவரின் டூவீலரை தரவில்லை. நாளை வந்து வாங்கிக்கொள் என்று சொல்லிய போலீஸிடம் டூவீலரை வாங்க பாவூர் சத்திரம் காவல்நிலையம் போன போது அவர் வீடு திரும்ப வில்லை.


என் கணவர் காணவில்லையை என்று காவல்நிலையம் போய் பார்த்தால் என் கணவர் அரைநிர்வாணத்தில் அலங்கோலமாக கிடந்தார். அந்த காட்சியை பார்த்ததும் என் குலையே நடுங்கியது. அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் என் கணவர் என்ன தவறு செய்தார் ஏன் அப்படி அடித்து அரைஉசுறாக போட்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதன் பிறகு போலீசார் என் கணவரை விடுவித்தனர். வீட்டுக்கு வந்ததில் இருந்து என் கணவர் மிகுந்த மனவேதனையில் இருந்தார். நான் உங்களுக்கு இருக்கிறேன்.கவலைப்படாதீர்கள் என்று அவரை தேற்றினேன். அதற்கு அவர் சொன்ன வார்த்தை எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. "நான் என்ன தவறு செய்தேன். எதற்காக என்னை போலீஸ் இப்படிகொடூரமாக தாக்க வேண்டும். என் டூவீலரை கேட்டால் 15ஆயிரம் கேட்கிறார்கள். நம்மால் எப்படி அந்த பணத்தை கட்ட முடியும். என்று புலம்பிக்கொண்டே இருந்தவர் மே23ம் தேதி எங்க ஊர் பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் விசம் அருந்து தற்கொலை செய்து கொண்டார்".


இந்த தகவல் தெரிந்ததும் நான் என் கணவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள்.
இந்த தகவல் தெரிந்து கொண்ட பாவூர் சத்திரம் போலீசார் என்னிடம் வாக்குமூலம் வாங்கினார்கள். அப்போது போலீசார் நடத்திய கொடூரத்தையெல்லாம் சொன்னேன். பிரதே பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்லி என்னிடம் வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கினார்கள். பிறகு தான் தெரிந்தது வந்த போலீசார் என்னிடம் வாங்கி வாக்குமூலத்தை எழுத்தாமல் அவர்கள் என் கணவர் குடிபோதையில் தற்கொலை செய்து கொண்டதாக எழுதியிருக்கிறார்கள் என்று..எனவே தான் என் கணவர் மரணத்தில் நீதி வேண்டும் என்று கண்ணகி தன் கணவனுக்காக நீதிகேட்ட  மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார்.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பினேகாஸ் பேசும் போது..." போலீசார் அடித்து துன்புறுத்தியதால் அருணாச்சலம் தற்கொலை செய்து கொண்டதை போலீசார் மாற்றி குடி போதையில் இறந்ததாக எப்ஐஆர் பதிவு செய்திருக்கிறார்கள். நீதியரசர் புகழேந்தி இந்த வழக்கை ஆலங்குளம் டிஎஸ்பி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 3வாரகால அவகாசம் கொடுத்திருக்கிறார்கள்.சாத்தான் குளம் போல் இனியும் காவல்நிலையங்களில் அப்படியொரு சம்பவம் நடக்க கூடாது. இதுபோன்ற போலீஸ் அதிகாரிகளுக்கு மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற பயிற்சி கடுமையாக்கப்பட வேண்டும். அவர்களின் பதவி உயர்வில் பப்ளிக் ரிலேசன் னும் இடம் பெறவேண்டும் என்றார்.


இளம் காவல்துறை அதிகாரிகள் கொலைவெறித்தனமாக நடந்துகொள்ளுவதற்கு என்ன காரணம் என்று காவல்துறையின் உயர்அதிகாரி ஒருவரிடம் பேசினோம்." எஸ்ஐ பயிற்சி கொடுக்கும் போதே மக்களிடம் அரசியல்வாதிகளிடம் சமூக ஆர்வலர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பயிற்சி கொடுத்து வருகிறோம். ஆனால் ஒருசிலர் எஸ்ஐக்கள் இதுபோன்ற அராஜகமாக சிங்கம் படம் போல் நடந்துகொள்கிறார்கள். அவர்களில் பெரும்பாலும் ஏழ்மையாக குடும்பத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஏன் இப்படியொரு கொடூரம் இருக்கிறது என்று தெரியவில்லை. இதுபோன்ற சம்பவங்களில் அவர்கள் பாதிக்கப்படும் போது தான் திருந்துவார்கள்.என்கிறார் அவர்.

click me!