
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கேர்மாளம் மலைப்பகுதியில் கடந்த நவம்பர் 16ம் தேதி மலைவாழ் மக்கள் ஆடு, மாடு, மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு நிலத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டு மேல்பகுதியில் கற்கள் அடுக்கப்பட்டதைக் கண்டு சந்தேகம் அடைந்த மலைவாழ் மக்கள் உடனடியாக ஆசனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் அப்பகுதியில் உள்ள குழியை தோண்டி பார்த்தபோது அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்தில் மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் தலையில் பலமாக தாக்கியதில் சுமார் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க நபர் இறந்துள்ளதாக தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கொலை செய்யப்பட்ட நபர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பதும், கட்டிடத் தொழிலாளியான இவர் அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர்களான ரமேஷ், சதீஷ் என்கிற பஞ்சையன் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேர்மாளம் மலைப்பகுதிக்கு வேலைக்கு வந்தபோது அப்பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருந்த பொம்மன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மலைப் பகுதியிலேயே தங்கி விவசாயக் கூலி வேலை செய்து வந்தனர். கடந்த அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை தினத்தன்று செல்வம், ரமேஷ், சதீஷ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பொம்மன் விவசாயம் செய்யும் தோட்டத்தில் உள்ள குடிசையில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது போதை தலைக்கேறியதால் வாக்குவாதம் முற்றியதால் ரமேஷ் கட்டையால் தாக்கியதில் மயக்கம் அடைந்த செல்வம் கீழே படுத்திருந்தபோது சதீஷ் கல்லை எடுத்து செல்வத்தின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். இதனையடுத்து ரமேஷ், சதீஷ் இருவரும் இது குறித்து பொம்மையனிடம் தகவல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
இதை தொடர்ந்து பொம்மையன் தனது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த மாதேவன் என்பவரது உதவியுடன் இருவரும் சேர்ந்து கொலை செய்யப்பட்ட செல்வத்தின் உடலை அருகே இருந்த நிலத்தில் குழி தோண்டி புதைத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் திருப்பூர் பகுதியில் தலைமறைவாக இருந்த ரமேஷ், சதீஷ் இருவரையும் மடக்கி பிடித்தனர். மேலும் உடலை புதைத்த குற்றத்திற்காக பொம்மன் மற்றும் மாதேவன் என நான்கு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.