பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் அளித்த சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
நொய்டாவில் உள்ள பள்ளி வளாகத்தில் தங்கள் வகுப்பு தோழியை தாக்கி துன்புறுத்தியதாக 5 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் துன்புறுத்தல் குறித்து பள்ளி முதல்வரிடம் கடந்த 9ஆம் தேதி புகார் அளித்துள்ளார். ஆனால், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் கடந்த 13ஆம் தேதியன்று மீண்டும் அச்சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து, மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நொய்டா செக்டார் 100 இல் அமைந்துள்ள அந்த தனியார் பள்ளி இதுகுறித்து பள்ளி அளவிலான விசாரணையை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி காவல் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, அவளது வகுப்பு தோழர்களால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இதுகுறித்து செக்டர் 39 காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.” என்றார்.
கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவர்.. ஆத்திரத்தில் தாலி கட்டிய மனைவி செய்த காரியம்..!
இந்த வழக்கில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த செய்தித்தொடர்பாளர், “புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் மைனர்கள். தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து இ-மெயில் மூலம் பள்ளி முதல்வருக்கு சிறுமி புகார் அளித்துள்ளார். அந்த புகார் தொடர்பாக பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்தும் விசாரிக்கப்படும்.” என்றார்.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 323, 352, 345A (பாலியல் வன்கொடுமை) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவியின் தந்தை கடந்த 13ஆம் தேதி அளித்த புகாரில், தனது மகளின் புகாரை அடுத்து, எந்த எல்லைக்கும் தாங்கள் செல்வோம் என குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“இதுகுறித்து பள்ளிக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அக்டோபர் 13ஆம் தேதி எனது மகளுக்கு மீண்டும் அவர்கள் துன்புறுத்தல் அளித்துள்ளனர். என்னை அழைத்து எனது மகள் இதுபற்றி தெரிவித்தார். பள்ளி முதல்வரை உடனடியாக நான் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த விஷயத்தை விசாரிப்பதாக மட்டும் அவர்கள் உறுதி அளித்தனர்.” என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களில் ஒருவர் தனது மகளைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் சிறுமியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் பற்றி அறிந்திருப்பதாகக் கூறிய பள்ளி நிர்வாகம், சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்கபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.