தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற நபரை மர்ம நபர்கள் வழிமறித்து அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 50). விவசாயியான இவர் இறால் பண்ணையும் நடத்தி வருகிறார். இவரது உறவினரான அய்யம்பேட்டை அருகேயுள்ள பசுபதி கோவிலைச் சேர்ந்த செந்திலுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் செந்தில் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, செந்தில், ஜெயக்குமார், அவரது நண்பர் காட்டுக்குறிச்சியைச் சேர்ந்த பிரவீன் (28) ஆகியோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார் கொடுப்பதற்காக நேற்று சென்றுள்ளனர். அங்கு அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார், செந்தில், பிரவீன் ஆகியோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அய்யம்பேட்டை காவல் நிலையத்துக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர். அப்போது பசுபதி கோவில் அருகே சென்றபோது சிலர் காரை வழிமறித்து ஜெயக்குமார், செந்தில், பிரவீன் ஆகியோரை ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர்.
புதுவையில் சிறுமி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை; சிபிஐக்கு மாற்ற கோரிக்கை
இதனால், பலத்த காயமடைந்த ஜெயக்குமார், பிரவீன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஜெயக்குமார் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். பிரவீன் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அய்யம்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்ற நபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.