ஸ்ரீதரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த தியாகு மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் தனித்தனியாக பிரிந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். ஸ்ரீதரின் இடத்தை பிடிக்க இருவருக்கும் இடையே நீடிக்கும் போட்டியில் 13-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தியாகுவை அரியானாவில் கைது செய்த தமிழ்நாடு காவல்துறை அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
காஞ்சிபுரம் நகரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கடந்த 2017-ம் ஆண்டு கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீதரின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த தியாகு மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் தனித்தனியாக பிரிந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். ஸ்ரீதரின் இடத்தை பிடிக்க இருவருக்கும் இடையே நீடிக்கும் போட்டியில் 13-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து வெளியேறி, தலைமறைவாக இருந்து, வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்தார். ரவுடிகளை கட்டுப்படுத்த மாவட்ட காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், தியாகுவை பிடிக்க எஸ்.பி. சுதாகர் தனி கவனம் செலுத்தினார். மேலும், சென்னையில், புறநகர் பகுதிகளில் ரவுடிகளை ஒழிக்க தமிழ்நாடு காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. போலீஸ் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பிக்க ரவுடி தியாகு ஒவ்வொரு மாநிலமாக சென்று பதுங்கினார்.
இந்நிலையில், அரியானா மாநிலத்தில் ரவுடி தியாகுவை கைது செய்த தனிப்படை போலீசார் அவரை விமானம் மூலம் நள்ளிரவில் சென்னைக்கு அழைத்து வந்தனர். ரவுடி தியாகு மீது 11 கொலைகள், 15 கொலை முயற்சி உள்ளிட்ட 63 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் காஞ்சிபுரத்திற்கு அழைத்து செல்லப்பட்ட தியாகுவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.